Published : 05 Aug 2020 04:24 PM
Last Updated : 05 Aug 2020 04:24 PM
நிலுவையில் உள்ள சம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலைக்கு செல்வோம் எனக்கூறி ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 175 தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஒப்பந்த அடிப்படையில் சம்பளத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக சம்பளத்தொகை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் ஆணையாளர் நடவடிக்கை எடுக்காததால், பொறுமையிழந்த தூய்மைப் பணியாளர்கள் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தை இன்று (ஆக.5) காலை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தொழிலாளர்கள் தரப்பில் கூறும்போது, "ஆம்பூர் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கரோனா தடுப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.
நகராட்சி முழுவதும் தினந்தோறும் கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, நோய் தடுப்பு மருந்துகள் தெளித்து வருகிறோம். ஆனால், அதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் நகராட்சி சார்பில் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இருப்பினும், பொதுமக்கள் நலன் கருதி கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தோம்.
இது தவிர எங்களுடைய வழக்கமான பணிகளையும் நாங்கள் கவனித்து வருகிறோம். ஆனால், எங்களுக்கு முறையான சம்பளம் கடந்த 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. தற்போது வழங்கப்படும் சம்பளத் தொகையுடன் ரூ.100 உயர்த்தித் தர வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இந்நிலையில், எங்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தொகை கடந்த 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால், நாங்கள் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இது தவிர எங்கள் சம்பளப் பணத்தில் பிடித்தம் செய்யப்படும் இஎஸ்ஐ, பிஎஃப் தொகை வங்கி செலுத்தாமல் எங்கள் சம்பளத்தில் சேர்த்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கும் பதில் இல்லை.
நகராட்சி ஒப்பந்ததாரர் ஒரு நாள் கூட விடுப்பு வழங்குவது இல்லை. தினமும் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்புப் பணிக்கு செல்லும்படி கூறுகிறார். ஆனால், சம்பளத்தை கேட்டால், நகராட்சியில் நிதியில்லை, வந்த உடன் தருகிறோம் எனக்கூறுகிறார். எனவே, எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை பணிக்குச் செல்ல மாட்டோம். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றனர்.
இதைத்தொடர்ந்து, ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன், ஆம்பூர் டவுன் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், தொழிலாளர் சங்கத் தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கரோனா தடுப்புப் பணிகள் நடைபெறாமல் போக வாய்ப்புள்ளது, எனவே, போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்புங்கள், தூய்மை ப்பணியாளர்களுக்கு சேர வேண்டிய சம்பளத் தொகை வரும் 16-ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையேற்ற தூய்மைப் பணியாளர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அங்கு 3 மணி நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT