Published : 05 Aug 2020 03:28 PM
Last Updated : 05 Aug 2020 03:28 PM
கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக புதுச்சேரி காங்கிரஸ் அரசைக் கூட்டணிக் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் விமர்சித்துள்ளன.
புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இறப்பும் அதிகரித்து வருகிறது. இச்சூழலில் எதிர்க்கட்சியான அதிமுக மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சியான திமுகவும் அரசைத் தொடர்ந்து விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.
ஆளுநர், முதல்வர், அமைச்சர் இடையில் 'ஈகோ'வால் மக்கள் பாதிப்பு - அதிமுக குற்றச்சாட்டு
புதுச்சேரி அரசை விமர்சித்து சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ இன்று (ஆக.5) வெளியிட்ட அறிக்கை:
"புதுச்சேரி மாநிலம் முழுவதும் மக்கள் உயிர் பயத்தோடு வாழும் நிலையில் துணைநிலை ஆளுநர், முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் 'ஈகோ' பிரச்சினையால் மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். கரோனா தடுப்பில் ஈடுபடும் உயர் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரடியாகப் பல மணிநேரமும், துணைநிலை ஆளுநருடன் தினசரி இரண்டு மணிநேரமாவது காணொலிக் காட்சி வழியாகவும் நேரம் ஒதுக்கி இந்த விளக்கம் அளித்து வருகிறார்கள்.
மனித உயிர்களின் இழப்புகளைத் தடுக்கும் பொறுப்புமிக்க பதவியில் உள்ளவர்கள் தங்களுடைய போட்டி மனப்பான்மை மற்றும் 'ஈகோ' பிரச்சினைகளைப் புறந்தள்ளி மக்கள் நலனுக்காக ஒருங்கிணைந்து பணி செய்ய முன்வராதது, பாவச் செயலுக்குச் சமமானதாகும்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் உயர்ந்த பொறுப்பான பதவியில் அமர்ந்து கொண்டு மாறி மாறி மக்களைக் குழப்புகின்ற விதத்தில் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதைத் தவிர்த்துப் பொறுப்புடன் செயல்பட்டு மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.
முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தனித்தனியாக அதிகாரிகளை அழைத்து தினந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, இருவரும் இணைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி அதன் முடிவினை துணைநிலை ஆளுநருக்குக் குறைந்தபட்சம் கடிதத்தின் மூலமாவது தெரிவிக்க முன்வர வேண்டும்.
தமிழகத்தில் ஆளுநரை முதல்வர் சந்தித்து அரசு நடவடிக்கைகளைத் தெரிவிக்கிறார். புதுச்சேரியிலும் ஆளுநர், முதல்வர் இணைந்து செயல்படுவதன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித மன நெருக்கடி மற்றும் உளைச்சலுக்கு ஆளாகாமல் சுதந்திரமாகவும், ஈடுபாட்டுடனும் செயல்பட முடியும்"
இவ்வாறு அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கரோனா நோயாளிகளைக் காத்திருப்பில் வைப்பது கண்டிக்கத்தக்கது - கூட்டணிக் கட்சியான திமுக கடும் விமர்சனம்
அதேபோன்று, தெற்கு மாநில திமுக அமைப்பாளர் எம்எல்ஏ சிவா இன்று வெளியிட்ட அறிக்கை:
"போதிய படுக்கைகளை உருவாக்காததால் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
முதல்வர் நாராயணசாமி அறிவித்தபடி, தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளை உருவாக்கவில்லை. கரோனா நோயாளிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியாதபடி உங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரி மாநில மக்கள் அரசு மீது வெகுண்டு போய் உள்ளனர்.
கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் அவர்களின் உடல்நிலை குறித்தும்கூட உறவினர்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படுவதில்லை. இறந்த பின்னர் தகவல் சொல்லும் நிலையே உள்ளது. கடைசிக்கட்ட மூச்சுத்திணறல் நேரத்தில்கூட அவசர சிகிச்சை முறையாக அளிக்கப்படுவதில்லை. இதனால் கரோனா நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, மக்களைக் காக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை ஈடுபட வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் இவ்வளவு படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம் என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்புகிறோம்.
அதேபோல் சிகிச்சை தர மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் தேவை என்று அறிந்து அவர்களை தேர்வு செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வேதனை தருகிறது".
இவ்வாறு திமுக எம்எல்ஏ சிவா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT