Last Updated : 05 Aug, 2020 02:40 PM

 

Published : 05 Aug 2020 02:40 PM
Last Updated : 05 Aug 2020 02:40 PM

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா: பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்ற சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 438-வது ஆண்டு பெருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பேராலயத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஜாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டு 438-வது பெருவிழா கடந்த ஜூலை 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பக்தர்கள் இல்லாமல் கொடியேற்று விழா ஜூலை 26-ம் தேதி நடைபெற்றது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பேராலயத்துக்குள் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் நடைபெற்றன.

ஆனால், இவைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பனிமய அன்னையை வழிபடும் வகையில் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல் வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

10-ம் திருவிழாவான நேற்று மாலை 7 மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று அன்னையில் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஜெபமாலையுடன் வழிபாடுகள் தொடங்கின. காலை 5.30 மணிக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் மக்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை குமார் ராஜா உள்ளிட்ட பல்வேறு அருட்தந்தையர்கள் இணைந்து இத்திருப்பலியை நிறைவேற்றினர்.

காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலியும், பகல் 12 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட தற்போதையஆயர் ச.அந்தோணிசாமி தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இந்த திருப்பலிகளில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை இறைமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு கண்டு மகிழந்தனர்.

வழக்கமாக 10-ம் திருவிழா அன்று (ஆக்.4) இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திலும், 11-ம் திருவிழா அன்று (ஆக.5) மாலை 7 மணிக்கு நகர வீதிகளிலும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறும்.

ஆனால், இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக சப்பர பவனி ரத்து செய்யப்பட்டது. மேலும், திருவிழா நடைபெறும் 11 நாட்களும் தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற சுவடே தெரியாமல் முடிந்துவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x