Published : 05 Aug 2020 11:10 AM
Last Updated : 05 Aug 2020 11:10 AM

நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கன மழை: அவலாஞ்சியில் 390 மி.மீ. மழை பதிவு

தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ள குந்தா அணை.

உதகை

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில் 390 மி.மீ. மழை பதிவானது. பலத்த காற்று வீசுவதால் மரங்கள் சாய்ந்து உதகை, கூடலூர் பகுதிகள் இருளில் மூழ்கின.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகப் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தையொட்டி உள்ள பகுதிகளில் மிக கன மழையும், பிற பகுதிகளில் பரவலாகவும் மழை பெய்து வருகிறது.

மழை தொடர்வதால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருவதால் பல கிராமங்களில் மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

மேலும், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கூடலூர் முதல்மைல் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள புறமணவயல் பழங்குடி காலனிக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது.

மீட்கப்பட்டவர்கள் அத்திப்பாளி அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

மேலும், வேடன்வயல் சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. தட்டக்கொல்லி காலனி பகுதிக்கும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இருவயல், தேன்வயல், மொளப்பள்ளி பழங்குடி கிராமங்களில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரை முன்னெச்சரிக்கையாக வருவாய்த் துறையினர் மீட்டு புத்தூர்வயல் அரசுப் பள்ளியில் தங்கவைத்தனர்.

கூடலூர் புறமணவயல் பழங்குடியினர் பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டு தீவு போல் காட்சியளிக்கிறது.

முதுமலை-பந்திப்பூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்துத் தடைப்பட்டது.

பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக உதகை நகரில் தீயணைப்பு நிலைய வளாகம், படகு இல்லம் சாலை உட்பட பல பகுதிகளில் மின் கம்பங்களின் மீது சாய்ந்தன. இதனால், உதகை நகரில் திங்கள்கிழமை இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

உதகை நகரில் ஆல்ம்ஸ் ஹவுஸ் சாலையில் ஒரு வீடும் இடிந்தது. தொடர் மழை மற்றும் பலத்த காற்றுடன் கடும் குளிர் நிலவுவதால் உதகை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி, வாகனப் போக்குவரத்தின்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

உதகை ரயில்வே குடியிருப்புகள் மீது மரம் விழுந்தது.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும் போது, "மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி, வருகிற 8-ம் தேதி வரை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் நிலச்சரிவு, வீடுகள் இடிந்து விழுதல், மரம் விழுதல் ஆகியவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் செல்லக்கூடிய தாழ்த்தப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை 5 பாதுகாப்பு முகாம்களில் சுமார் 500 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நமது மாவட்டத்தில் 283 இடங்களை மழை நீரினால் பாதுப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதுவரை ஒரு இடத்தில் மட்டும் வீடு முழுமையாக இடிந்துள்ளது. இரண்டு இடங்களில் சுவர்கள் மட்டும் இடிந்துள்ளது.

கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் மரத்தின் அடியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள 300 பள்ளிகளும் பாதுகாப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இயற்கை இடர்பாடுகள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக 1077 என்ற தொலைப்பேசி எண்ணுக்கு அழைக்க வேண்டும்.

பாதுகாப்புப் பணியில் 40 நபர்கள் கொண்ட இரண்டு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. தேசிய பேரிடர் குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முகாம்களில் தங்குபவர்களுக்கு மின்சார வசதி கிடைத்திடும் வகையில் ஜெனரேட்டர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ) விவரம்:

உதகை 39.4, நடுவட்டம் 147, கிளன்மார்கன் 137, குந்தா 70, அவலாஞ்சியில் 390, எமரால்டு 145, அப்பர் பவானி 306, பாலகொலா 111, கூடலூர் 128, தேவாலா 126, பந்தலூர் 161, சேரங்கோடு 136.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x