Published : 04 Aug 2020 07:00 PM
Last Updated : 04 Aug 2020 07:00 PM
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு முதலில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவே தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இந்த சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனைகள் சுத்தமாக பராமரிக்கப்படாததால் பலர் கரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் ரூ. 5 முதல் 10 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
எனவே அரசு, தனியார் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கைகள், சிகிச்சையிலிருக்கும் நோயாளிகளின் விபரங்களை வெளியிடவும், உயிரிழப்பு விபரங்களை வெளியிடும் போது கரோனாவால் உயிரிழந்தவர்கள், பிற நோயால் உயிரிழந்தவர்களின் விபரங்களை தனித்தனியாக வெளியிடவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு ஆரோக்கியமான, சத்தான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கவும், மருத்துவமனை கழிவறைகளை தினமும் 3 வேளை சுத்தம் செய்யவும், கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்யவும், தமிழக அரசின் அரசாணை அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணம் வசூலிப்பதை உறுதிப்படுத்தவும், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் 10 நாள் சிகிச்சைக்கு ரூ.8.80 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT