Published : 04 Aug 2020 06:50 PM
Last Updated : 04 Aug 2020 06:50 PM
திருச்சி பொன்மலை பணிமனையில் பணி நியமனம் பெற்ற வட மாநிலத்தவர்கள் 150-க்கும் அதிகமானோர் இன்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தனர். ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கூறி அங்கு அப்ரண்டிஸ் முடித்தவர்கள் பணிமனை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டினருக்கு 90 சதவீதமும், எஞ்சிய 10 சதவீதம் மட்டுமே பிற மாநிலத்தவருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயில் குரூப்-2 பிரிவு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டு செப்டம்பரில் பணி நியமன ஆணை பெற்ற 1,700-க்கும் அதிகமானோரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டவர்கள் 528 பேர். இதில், 450-க்கும் அதிகமானோர் வட மாநிலத்தவர். ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அப்போதே பல்வேறு அரசியல் கட்சியினர், ரயில்வே தொழிற்சங்கத்தினர், ரயில்வே அப்ரண்டிஸ் முடித்த தமிழர்கள் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், திருச்சி பொன்மலை பணிமனைக்கு இன்று (ஆக.4) 150-க்கும் அதிகமான வட மாநிலத்தவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தனர். இதுகுறித்துத் தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அங்கு அப்ரண்டிஸ் முடித்த இளைஞர்கள் ஆகியோர் பணிமனை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிச் செயலாளர் என்.கார்த்திகேயன், 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், "திருச்சி பொன்மலை பணிமனையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1,000 பேர் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,200-க்கும் அதிகமானோர் இதுவரை அப்ரண்டிஸ் முடித்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டினருக்கு வேலை வழங்காமல் வட மாநிலத்தவருக்கே தொடர்ந்து வேலை வழங்கி வருகின்றனர்.
தற்போதுகூட 540 தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு வட மாநிலத்தவரே அதிகம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதற்கேற்ப நேற்று 150 பேர், இன்று 150 பேர் என்று வட மாநிலத்தவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்து செல்கின்றனர். நாளையும் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தமிழர்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அண்டை மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் வட மாநிலங்களில் இருந்து எப்படி வந்தார்கள் என்று காவல் துறையினருக்கே தெரியவில்லை. விமானத்தில் வந்திருந்தாலும் திருச்சியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனரா என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
எனவே, வட மாநிலத்தவருக்குப் பணி வழங்குவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டினருக்குப் பணி வழங்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டோம். நாளையும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT