Published : 04 Aug 2020 06:05 PM
Last Updated : 04 Aug 2020 06:05 PM

கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் வீட்டில் போதைப்பொருள் தயாரித்த இளைஞர் சிக்கினார்: டிஎஸ்பி வீட்டை வாடகைக்கு எடுத்து துணிகரம் 

சென்னை

சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் டிஎஸ்பி வீட்டை வாடகைக்குப் பிடித்து துணிகரமாக வீட்டில் போதைப்பொருள் தயாரித்து வந்த இளைஞரை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சிபிசிஐடியில் டிஸ்பியாக இருப்பவர் ராதாகிருஷ்ணன். இவருக்குச் சொந்தமாக கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டைத் தேனியைச் சேர்ந்த அருண் என்ற இளைஞருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். தான் வேலை பார்த்துக்கொண்டே படிப்பதாக அருண் கூறியுள்ளார். வீட்டிற்கு வருவதும், போவதும் தெரியாத அளவுக்கு இருந்துள்ளார்.

இந்நிலையில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் சிலர் சிக்கியுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூட்டாளி தேனியைச் சேர்ந்த அருண் கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் குடியிருப்பதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்தது.

நேற்று இரவு 11 மணிக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ரிச்சர்டு என்பவர் தலைமையில் அருண் குடியிருந்த வீட்டைச் சோதனை செய்ததில் ஏராளமான போதைப் பொருட்கள், அதை பாக்கெட்டாக தயாரிப்பதற்கு மெஷின், பாலித்தீன் கவர்கள், கஞ்சா எண்ணெய் ஆகியவை இருந்துள்ளன. நள்ளிரவு வரை விசாரணை நடத்திய போலீஸார் வீட்டுக்கு சீல் வைத்துவிட்டு அருணை அழைத்துச் சென்றனர்.

காலையில் அருண் தங்கியிருந்த, டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் வீட்டின் சீலை அகற்றி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் கருப்பசாமி தலைமையில் சோதனை நடந்தது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், கடந்த ஆண்டு வாடகைக்கு வீடு தேடி வந்துள்ளார். டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மனைவியிடம் வாடகைக்குப் பேசி குடியிருந்துள்ளார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குச் சந்தேகம் வராத அளவுக்கு நல்லவர் போல் நடந்துள்ளார். வீட்டில் ரெய்டு நடப்பது குறித்துத் தகவல் அறிந்து வந்த ராதாகிருஷ்ணன் போலீஸாரிடம் தகவல் கேட்க, அவர்கள் தாங்கள் யாரென்று கூறி வந்த விஷயத்தைக் கூறியுள்ளனர். உங்கள் பணியைத் தொடருங்கள் என அவர் அனுமதி அளித்துச் சென்றுள்ளார்.

இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதால் எத்தனை பேர் கைது, பிடிபட்ட போதைப்பொருட்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x