Published : 04 Aug 2020 03:19 PM
Last Updated : 04 Aug 2020 03:19 PM
"கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியின் பெயரிலும் பல ஆயிரங்கள் செலவு செய்வதாக பில்போடும் தமிழக அரசு, அவர்களது நலனில் உண்மையான அக்கறையோடு செயல்படவில்லை" என, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் சிகிச்சை பெற்று வரும் கீதாஜீவன் தனி அறையில் இருந்தவாறே கட்சி நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இதில் தங்களது இல்லங்களில் இருந்தவாறே பங்கேற்றனர்.
வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் நினைவு தினம் மற்றும் பல்வேறு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 7-ம் தேதி கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.
மேலும், கரோனா முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரை கவுரவப்படுத்துவதுடன், தேவைப்படுத்துவோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சராசரியாக 300 பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கரோனாவால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் எந்த ஒரு அடிப்படை வசதியும் சரியாக செய்யப்படவில்லை. குறிப்பாக குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் எதுவும் முழுமையாக இல்லை. அதுபோல அவர்களுக்கு வழங்கப்படும் உணவும் தரமாக இல்லை என புகார்கள் வருகின்றன.
கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியின் பெயரிலும் பல ஆயிரங்கள் செலவு செய்வதாக பில்போடும் தமிழக அரசு, அவர்களது நலனில் உண்மையான அக்கறையோடு செயல்படவில்லை என்றே தெரிகிறது. எனவே, மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தெற்கு மாவட்டம்:
இதேபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். குறிப்பாக கரோனா முன்கள போராளிகளான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினருக்கு சிறப்பு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT