Published : 04 Aug 2020 02:25 PM
Last Updated : 04 Aug 2020 02:25 PM
கரோனா காலத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் சானிடைசரும், முகக்கவசங்களும்தான் கண்ணில் படுகின்றன. அந்த அளவுக்குக் கிராம மக்கள்கூட இவற்றைப் பயன்படுத்தும் அளவுக்கு விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல சானிடைசரை அதிகமாகப் பயன்படுத்தினால் அதுவும் நமது உடம்புக்கு விஷமாகும் என்கிறார் மருத்துவர் தீபா.
சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் தீபா சென்னையில் உள்ள கரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு மன இறுக்கத்தைப் போக்கும் விதமாக யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளிப்பதுடன் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இயற்கை மருந்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் சானிடைசர் பயன்பாடு குறித்தும் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் ‘இந்து தமிழ்’ இணையத்திடம் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட தீபா, “சானிடைசர் பயன்படுத்திவிட்டால் கையைக் கட்டாயம் சோப்புப் போட்டுக் கழுவிவிட்டுத்தான் உணவுப் பொருட்களைக் கையால் எடுத்து உண்ண வேண்டும். ஆனால், சானிடைசர் பயன்படுத்திவிட்டாலே கை சுத்தமாகி விடுவதாக பெரும்பாலானவர்கள் மத்தியில் தவறான புரிதல் இருக்கிறது.
அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துவதால் நமது கைகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்களும் நாசினி ஆகிவிடுகின்றன. இதனால் நமது கைகளுக்கே உரிய சிறப்பு குணங்களும் போய்விடுகின்றன. உதாரணத்துக்கு, இட்லி மாவு அரைத்து, கரைத்து வைத்தால் சரியாகப் புளிக்காது. ஈஸ்ட் குறைந்து மிருதுத் தன்மை போய்விடும். சானிடைசர் பயன்படுத்துவதால் நமது கைகள் எப்போதும் ஸ்டெர்லைஸ் நிலையில் இருப்பதால் காய்ச்சிய பாலில் நம் கைபட்டாலும் அது கெட்டுப் போகாது.
இன்னொருபுறம், சானிடைசர் கைகளால் அப்படியே நாம் உணவை உட்கொண்டால் சானிடைசரில் இருக்கும் ரசாயனங்கள் நமது வாய்ப் பகுதியிலிருந்து குடல் பகுதி வரை இருக்கும் மியூகோஸோ லேயரை (Mucoso Layer) அரித்துவிடும். இந்த லேயர் இல்லாவிட்டால் அல்சர் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் உண்டாகும். சாப்பிட்ட உணவு அடிக்கடி எதுக்களிக்கும்.
சானிடைசரில் இருக்கும் ஆல்கஹால், நமது ரத்தத்தின் அமிலத் தன்மையையே மாற்றிவிடும். இதனால் உடலில் எதிர்ப்புச் சக்தி குறையவும் வாய்ப்பிருக்கிறது. அடிக்கடி நாம் சானிடைசரைப் பயன்படுத்துவதால் நமது உடலில் எப்போதும் நோய் எதிர்ப்புச் சக்தியை எதிர்க்கும் தன்மை நிரந்தரமாகி விடும் ஆபத்தும் இருக்கிறது. இந்த நிலை ஏற்பட்டால், நமக்கு வரும் நோய்களை எந்த மருத்து கொடுத்தாலும் எளிதில் குணப்படுத்த முடியாது.
இதேபோல், குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிக்கும் தாய்மார்கள் அதை மாற்றும்போது சானிடைசர் பயன்படுத்தி குழந்தையைச் சுத்தப்படுத்துகிறார்கள். இப்படிச் செய்தால் கிருமிகள் அழிந்துவிடும் என நினைத்தால் அது முற்றிலும் தவறு. இதனால் எக்ஸிமா என்ற தோல் வியாதி வர வாய்ப்பிருக்கிறது. மாய்ஸரைசரையும் சேர்த்துப் பயன்படுத்தினால் எக்ஸிமா வருவதை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும்.
அதேபோல், குழந்தைகளை ஈர்க்கும் வண்ணங்களிலும் சுண்டி இழுக்கும் வாசனைகளுடனும் சானிடைசர்கள் வருவதால் அவர்கள் அதை அடிக்கடி கைகளில் ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இது குழந்தைகளுக்கு உடல் ரீதியாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மத்திய நோய்த் தடுப்பு அமைப்பு எச்சரித்திருக்கிறது.
சானிடைசர்களில் எத்தில் ஆல்கஹால் கலக்கப்படுகிறது. கரோனா காலத்தில் ஆல்கஹால் கலந்த சானிடைசரையே பயன்படுத்த வேண்டும். இந்த வகை சானிடைசர்களில் ட்ரைக்ளோசன் (Triclosan), ட்ரைக்ளோகார்பன் (Triclocarban) என்ற ஆன்டிபயாடிக் வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. இவை இரண்டும் மனித உடலுக்குள் அதிகமாகச் சென்றால் பெண்களுக்கு கருத்தரித்தலில் பிரச்சினை உண்டாகும்; கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
ஆல்கஹால் கலக்காத சானிடைசர்களும் இருக்கின்றன. ஆனால், அதிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த வகை சானிடைசர்களில் பைத்தாலேட்ஸ் (Phthalates) அல்லது பேராபின்ஸ் (Parabens) என்ற வேதிப்பொருட்களைக் கலக்கிறார்கள். இதுவும் நம் உடலுக்குள் சென்றால் ஹார்மோன் சுரப்பில் குழப்பம் உண்டாக்கி கருத்தரித்தலைப் பாதிக்கும்.
என்ன செய்ய வேண்டும்?
வெளியில் செல்பவர்கள் சானிடைசரைப் பயன்படுத்துவது அவசியம்தான். ஆனால், வீட்டுக்கு வந்ததும் சோப்புப் போட்டுக் கையை ஒன்றுக்கு இரண்டு முறை கழுவிய பிறகு உணவுப் பொருட்களைக் கையில் தொடுங்கள். வீட்டிலேயே இருக்கும் தாய்மார்கள் சானிடைசரைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அதற்குப் பதிலாக சோப்புப் போட்டு கையைக் கழுவுங்கள்; அதுபோதும்” என்று சொன்னவர், கடந்த நான்கு மாதங்களாக நோய் எதிர்ப்புச் சக்திக்காக மக்கள், சரியான அளவு தெரியாமல் மருந்துகளை உட்கொள்வது குறித்தும் விவரித்தார்.
“கரோனா தொடக்கத்தின்போது மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குவதற்காகத் தடுப்பு மருந்துகளைப் பரிந்துரைத்தார்கள். ஆனால், அதையெல்லாம் எந்த அளவில் எவ்வளவு நாளைக்குச் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல், மக்கள் இன்னும் அதைச் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மூன்று மாதங்களாக விடாமல் கபசுரக் குடிநீர் குடித்துக் கொண்டிருப்பதாக ஒரு பெண்மணி என்னிடம் தெரிவித்தார்.
கபசுரக் குடிநீர் உள்ளிட்ட கசாயங்களை தினமும் 20 முதல் 30 மி.லி. அளவு இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து எடுத்தால் போதும். அதன் பிறகு வாரத்தில் இரண்டு நாட்கள் இதே அளவு எடுத்தால் போதும். கபசுரக் குடிநீரில் கசப்புத் தன்மை அதிகம் இருப்பதால் இதை தொடர்ச்சியாக மாதக் கணக்கில் சாப்பிடுவது நல்லதில்லை.
மருந்தாக நினைத்து நாம் அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்ளும் விஷயங்களும் விஷமாகிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார் மருத்துவர் தீபா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT