Published : 04 Aug 2020 01:23 PM
Last Updated : 04 Aug 2020 01:23 PM
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் மற்றும் கால அட்டவணையை வெளியிடக் கோரி 'பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 6-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, 'பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜெ.முகம்மது ரசின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி கிடைப்பதற்காக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதனடிப்படையில், சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவீத இடங்கள், கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்படுகிறது. வழக்கமாக, அதற்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதியுடன் முடிவடையும்.
ஆனால், இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை என்பது தெரியாத நிலை உள்ளது. மேலும், தற்போதுள்ள சூழலில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் இடங்களுக்கான நடைமுறைகள் என்ன, எவ்வாறு நிரப்பப்படவுள்ளது என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவி்ல்லை.
இதனால், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கைக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கும் பெற்றோர்கள் குழப்பமடைந்துள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை வசூலிக்க உயர் நீதிமன்றமும் அனுமதியளித்துள்ளது.
எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை மற்றும் நடைமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அவற்றைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விளம்பரப்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
அதுவரை எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் 25 சதவீத இடங்களைக் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா முன்பு இன்று (ஆக.4) விசாரணைக்கு வந்தது. அதையடுத்து, நீதிபதிகள் இதுதொடர்பாக, வரும் 6-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT