Published : 04 Aug 2020 09:46 AM
Last Updated : 04 Aug 2020 09:46 AM
கூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள் எனவும், அவர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் எனவும், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, எல்.முருகன் இன்று (ஆக.4) வெளியிட்ட அறிக்கை:
"புதிய கல்விக் கொள்கை - ஆரம்பப் பள்ளி முதல் உயர் கல்வி வரை உலகத் தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு வழங்க இருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிலையங்கள் என கல்வித் துறையின் அனைத்துப் பிரிவுகளும் மேம்பட இருக்கின்றன.
தாய்மொழிக் கல்வி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதை அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்றிருக்கின்றனர். புதிய கல்விக் கொள்கையானது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட கொண்டு வரப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமானதல்ல.
இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என்பது எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மாணவர்கள் கல்வி கற்பதில் மகிழ்வான, உற்சாகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கூடுதல் மொழி கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
தமிழ்நாட்டில், சி.பி.எஸ்.இ, மாநில பாடத்திட்டத்திலான பள்ளிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இப்பள்ளிகளில் பல்வேறு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
அப்படியென்றால் கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும்தான் இழக்கிறார்கள். இந்தியோ மற்றொரு இந்திய மொழியோ கற்க விரும்பும் மாணவர்களின் ஆர்வத்திற்கும், பெற்றோர்களின் விருப்பத்திற்கும் நாம் தான் இடையூறாக இருக்கிறோம்.
1968-ம், 2020-ம் வாழ்வியல் முறையில் பார்க்கும்போது ஒரே முறையில் இருக்கிறதா? காலம் மாறவில்லையா? கருத்துக்கள் மாறவில்லையா? தமிழக மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை , இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பயிலும் வாய்ப்பை பெறுகிற போது, தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழை மூன்றாவது மொழியாக எடுத்துப் படிக்கும் வாய்ப்பை நாம் புறக்கணிக்கிறோமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படவில்லை என்பதை நன்கு அறிந்திருந்தோம். தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
செல்லும் இடங்களில் எல்லாம் தமிழின் உயர்வை எடுத்துக் கூறி வரும் பிரதமர், பல்லாயிரம் மாணவர்களிடையே பேசுகிற போது, நீங்கள் தமிழ் மொழியை கற்க வேண்டும் என்று தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக் கூறி வருகிறார்.
இந்திய மாணவர்களின், இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சி, உலக அளவில் அவர்களது போட்டித் திறன், ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும் புதிய கல்விக் கொள்கையை மொழி பற்றி மட்டுமே பேசி, தடுத்துவிட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT