Published : 04 Aug 2020 07:54 AM
Last Updated : 04 Aug 2020 07:54 AM
அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க பேரூராட்சிகள் சார்பில் ரூ.27.23 கோடி மதிப்பீட்டில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனுாரில் தொடங்கும் அடையாறு ஆறு பெருங்களத்தூர், திருநீர்மலை, குன்றத்தூர் ஆகிய பேரூராட்சிகள் வழியாக 42 கி.மீ தூரம் பயணித்து சென்னை - பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.
சென்னை நதிகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் அடையாறு ஆற்றை மறு சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆற்றின் கரையோரம், மிதிவண்டி பாதை, நடைபாதை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சுற்றுச்சூழல் பூங்கா, ஆற்றின் இருகரைகளிலும் தடுப்பு வேலி, நீரூற்றுகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
ஆற்றுப் பகுதிகளில் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி ஆகியவை அந்தந்த உள்ளாட்சிப் பகுதிகளில்சீரமைப்பு பணிகளை தற்போதுதொடங்கியுள்ளன. பெருங்களத்தூர், திருநீர்மலை, குன்றத்தூர் பேரூராட்சிகளின் எல்லையில் ஆக்கிரமிப்புகளை தடுக்க, சுமார்16 கி.மீ நீளத்துக்கு இரு பக்கங்களிலும் நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்க ரூ.27.23 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து பெருங்களத்தூர் பேரூராட்சி உதவிப்பொறியாளர் நடராஜ் கூறியதாவது: அடையாறு ஆற்றில், முதல்கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க 3 பேரூராட்சிகளில் ரூ. 27.23 கோடி மதிப்பீட்டில் பெருங்களத்தூர் முதல் குன்றத்தூர் வரை இரு பக்கங்களிலும் நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே குன்றத்தூர் பகுதியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் வரும் பருவமழைக்கு முன்பாகவே பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இதேபோல் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.51.69 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க. மேம்பாலம் முதல் மீனம்பாக்கம் விமான ஓடுபாதை மேம்பாலம் வரை 26.4 கி.மீ நீளத்துக்கு இரு பக்கங்களிலும் நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT