Published : 04 Aug 2020 07:47 AM
Last Updated : 04 Aug 2020 07:47 AM
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தனது சித்தாந்த எதிரியான திமுகவை எதிர்கொள்ள தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை கையில் எடுத்துள்ளது பாஜக. வீடுகள் தோறும் வேல் வழிபாடு, வேல் படம் வரைதல், குழந்தைகளுக்கு முருகன் வேடமிடும் போட்டி, கந்தசஷ்டி கவசம் ஒப்பித்தல் போட்டி நடத்துவது ஆகிய நடவடிக்கைகளில் தமிழக பாஜகவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகியவைதான் பிரதான கட்சிகள். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான திமுக, ஆளும் அதிமுகவைவிட பாஜகவைத்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. சமூக ஊடகங்களில் திமுக – பாஜக இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஒரு யூ-டியூப் சேனலில் கந்தசஷ்டி கவசத்தை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் திமுக இருப்பதாகக் கூறி பாஜக போராட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து, அந்த யூ-டியூப் சேனலின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், அந்த யூ-டியூப் சேனலுடன் திமுகவுக்கு தொடர்பு இல்லை என்று திமுக மறுத்தது. திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சியாக சித்தரிக்க முயற்சிகள் நடப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக குற்றம் சாட்ட, மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க பாஜக அரசு மறுக்கிறது. அவர்கள் இந்துக்கள் இல்லையா என்று இடஒதுக்கீட்டு அரசியலை திமுக கையில் எடுத்தது. தொடர்ந்து, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, புதிய கல்விக் கொள்கை ஆகியவை தொடர்பாகவும் பாஜகவை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தங்களது சித்தாந்த எதிரியான திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை கையில் எடுத்திருக்கிறது பாஜக. வீடுகள்தோறும் வேல் வழிபாடு, பாஜகவினர், முருக பக்தர்களின் வீடுகளில் வேல் படம் வரைதல், வேல் ஸ்டிக்கர் ஒட்டுதல், குழந்தைகளுக்கு முருகன் வேடமிடும் போட்டி, கந்தசஷ்டி கவசம் ஒப்பித்தல் போட்டி என்று பாஜக களமிறங்கியுள்ளது.
தற்போது பாஜகவினர் அனைவரும் தங்கள் வீடுகளில் வேல் படம் வரைந்து, அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். முருக பக்தர்களின் வீடுகளில் வேல் ஸ்டிக்கர் ஒட்டும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வீடுகள் முன்பு நின்று கந்தசஷ்டி கவசம் பாடலைப் பாடி, அதை விமர்சித்த யூ-டியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை பாஜக அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT