Published : 04 Aug 2020 07:40 AM
Last Updated : 04 Aug 2020 07:40 AM

அயோத்தியில் நாளை ராமர் கோயிலுக்கான பூமி பூஜை: சங்கர மடத்தில் இருந்து பூஜை பொருட்கள் சென்றன- முக்கிய கோயில்களின் புனித மண்ணும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது

அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்காக நாளை நடைபெறும் பூமி பூஜைக்காக காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து சென்ற பூஜை பொருட்கள்.

காஞ்சிபுரம்

அயோத்தியில் நாளை (ஆக. 5) நடைபெறும் ராமர் கோயிலுக்கான பூமி பூஜைக்காக காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து பூஜைப் பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் ஆகியவை அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும் முக்கிய கோயில்களில் இருந்து புனித மண்ணும் விமானம் மூலம் அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று வீடியோ மூலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கான பூஜை வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சங்கர மடத்தில் இருந்து பூஜைப் பொருட்கள், தங்கம், வெள்ளிக் காசுகள், கலசம், பட்டுத் துணி உள்ளிட்டவை அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஸ்ரீராமர், விநாயகருடன் கூடிய ஒரு புகைப்படமும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் படம் அந்தக் கோயிலில் வைக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் இருந்து புனித மண்ணும் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

1950-ம் ஆண்டில் இருந்து நீடித்து வந்த ராமர் கோயில் பிரச்சினை தற்போது சுமுகமாக முடிந்துள்ளது. இந்தக் கோயில் அமைய வேண்டும் என்பதற்காக இந்த மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். மேலும், அனைத்து சமுதாய தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்போது இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிந்து கோயில் அமைக்க பூஜை நடத்த இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

தமிழகத்துக்கும், அயோத்திக்கும் நீண்டகால தொடர்புகள் உண்டு. தமிழகத்தில் பழம்பெருமை வாய்ந்த ராமர் கோயில்கள் பல உள்ளன. இக்கோயிலுக்கான பூமி பூஜையின்போது மக்கள் “ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்” என்ற மந்திரத்தை 108 முறை வீட்டில் இருந்தபடியே ஜெபம் செய்ய வேண்டும்.

ராமர் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை போலவே பசுவை காப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பூஜைப் பொருட்கள் குறித்து சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் விளக்கம் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x