Last Updated : 04 Aug, 2020 07:26 AM

 

Published : 04 Aug 2020 07:26 AM
Last Updated : 04 Aug 2020 07:26 AM

மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம்: சமூகச் சேவையாற்றும் பிரான்ஸ் நாட்டு பெண்

வெண்புருஷம் பகுதியில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் முகக்கவசம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் பெண்மணி விரோனிக்கா.

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கரோனா தொற்று பரவலை தடுக்கும்வகையில் கிராம மக்களுக்கு முகக்கவசங்களை தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் சிலர், இங்குள்ள சூழலை விரும்பி பலமாதங்கள் தங்கிச் செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு தங்கும் சிலர் உள்ளூர் மக்களின் உதவியோடு சிற்பம் மற்றும் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்வது உட்பட பல்வேறு தொழில்நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

இதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விரோனிக்கா(55) என்ற பெண்மணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெண் புருஷம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இங்கு இவர் தையல் பயிற்சி பெற்ற மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு ஊரடங்கால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்றுமதிதொழில் முடங்கியுள்ளது. இதனால், மேற்கண்ட ஆடைதயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

எனினும், விரோனிக்கா தன் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை சுழற்சிமுறையில் பணியில் ஈடுபடுத்தி முகக் கவசம் தயாரித்து மாமல்லபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல்இதுவரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்து முகக் கவசங்களை தயாரித்து உள்ளூர்மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x