Published : 03 Aug 2020 07:06 PM
Last Updated : 03 Aug 2020 07:06 PM
இ-பாஸ் முறையை ரத்துச் செய்யக் கோரி வாடகை கார் ஓட்டுநர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அனைத்திந்திய ஓட்டுநர்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவர் கே.ரவிக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுநர்கள் இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரனை நேரில் சந்தித்து அளித்த மனு விபரம்:
கரோனா ஊரடங்கு காரணமாக வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இ-பாஸ் திட்டம் நடைமுறையில் இருப்பதால் பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் வேறு மாவட்டங்களுக்கு செல்ல முடியவில்லை.
இதனால் கார்கள் நீண்ட காலமாக ஓடமால் பழுதடைந்து வருகின்றன. எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் அல்லது சலுகை வழங்க வேண்டும். மேலும், ஊரடங்கு காலம் முழுவதும் மாதம் ரூ.5000 வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மனு:
தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்க தலைவர் எஸ்.ஜே.கயாஸ் தலைமையில் நாட்டுப்படகு மீனவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விபரம்:
தேதிய கடல் மீன்பிடிப்பு மசோதாவை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நாட்டுப்படகு மீனவர்கள்.
மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள தேசிய கடல் மீன்பிடிப்பு (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) மசோதா -2019, பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை, மீன்பிடி உரிமையை கடுமையாக பாதிக்கும். மீன்பிடி உரிமையை பெரும் பணக்காரர்களுக்கு வாரி வழங்க இந்த மசோதா வழிவகை செய்யும். மேலும், மாநில மீன்வளச் சடட்த்தை நீர்த்துப்போக செய்யும். மாநில உரிமை பாதிக்கப்படும். எனவே, அறிமுக நிலையில் உள்ள இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்தமிழர் கட்சி:
ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் க.வே.சுரேஷ்வேலன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டம் 2020 பொதுமக்களுக்கும், இயற்கைக்கும் எதிரானதாகும். எனவே, இந்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டம் 2020-ஐ ரத்து செய்யக் கோரி மனு அளிக்க வந்த ஆதித்தமிழர் கட்சியினர்
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு ஏற்றப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூதாட்டி மனு:
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கிராமத்தை சேர்ந்த வேலம்மாள் (77) என்ற பெண் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு: நான் கடந்த 2013-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.8.30 லட்சம் முதலீடு செய்தேன். இந்த பணத்துடன் வட்டியும் சேர்த்து திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த நிறுவனத்திடம் பலமுறைக் கேட்டும் இதுவரை பணம் கிடைக்கவில்லை.
தனியார் நிதி நிறுவனத்திடம் இழந்த பணத்தை மீட்டுத் தரக் கோரி மனு அளிக்க வந்த மூதாட்டி
தற்போது கண் தெரியாமல், ஆதரவின்றி தனியாக வசித்து வருகிறேன். சாப்பிாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எனது பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி மனு:
ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் வீ.குணசீலன் அளித்த மனு விபரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தூத்துக்குடி மாவட்டத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT