Published : 03 Aug 2020 05:51 PM
Last Updated : 03 Aug 2020 05:51 PM
திருச்சி மாநகரில் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு நாட்களில் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு மூலிகை கசாயம், சூப், கூழ் ஆகியவற்றை சொந்த செலவில் தயாரித்து இலவசமாக விநியோகித்து வருகிறார் பெண் ஒருவர்.
திருச்சி வடக்கு ஆண்டார் வீதியைச் சேர்ந்தவர் சுதா (42). கணவரை இழந்த சுதாவுக்கு கல்லூரி பயிலும் மகள், 10-ம் வகுப்பு செல்லும் மகன் ஆகியோர் உள்ளனர்.
தனது குடும்பத்தை நடத்தவே தினமும் உழைத்தாக வேண்டிய நிலையிலும், திருச்சி மாநகரில் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு நாட்களில் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோருக்குக் கசாயம், சூப் உள்ளிட்ட நோய் எதிர்ப்புச் சக்தி பானங்களை சொந்த செலவில் தயாரித்து கேனில் வைத்து இலவசமாக விநியோகித்து வருகிறார்.
காந்தி மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நேற்று (ஆக.2) துளசி கசாயத்தைக் கேனில் எடுத்து வந்து சூடாக விநியோகித்துக் கொண்டிருந்தார் சுதா.
இதுதொடர்பாக 'இந்து தமிழ்' இணையதளத்திடம் சுதா கூறுகையில், "கணவர் மறைவுக்குப் பிறகு உழைத்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழல். சமையல் வேலைகளுக்குச் சென்று வாழ்க்கை நடத்தி வரும் எனக்கு, உற்ற துணையாக இன்றளவும் தந்தை காத்தலிங்கமும், தம்பி லட்சுமணனும் உள்ளனர்.
இதனிடையே, கரோனா பாதிப்பு நேரிடாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத் துறையினர் களத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று மனதில் எண்ணம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்திமிக்க பானங்களைத் தயாரித்து வழங்க முடிவு செய்து தினமும் ஒரு வகை என்று பல்வேறு வகையான மூலிகை கசாயங்களையும், கூழ் வகைகளையும் தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறேன். தளர்வற்ற தொடர் ஊரடங்கு நாட்களில் தினமும் வழங்கிய நிலையில், தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்படும் நாட்களில் வழங்கி வருகிறேன்.
கசாயம் எடுத்து வரும் கேனுக்கு ஒரு நாளைக்கு ரூ.30 வாடகை கொடுத்து வந்த நிலையில், ஸ்ரீரங்கம் பகுதியில் எனது செயலைக் கண்ட ஸ்ரீரங்கம் கோகுல சமாஜம் அறக்கட்டளையினர் எனக்கு கேன் வழங்கி உதவியுள்ளனர். இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT