Published : 03 Aug 2020 11:55 AM
Last Updated : 03 Aug 2020 11:55 AM
தமிழ்நாட்டில் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சகம் எனப் பெயர் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
எட்டாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, கல்லூரிகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக, திமுக, பாமக, மதிமுக, தமிழக காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில், இன்று (ஆக.3) புதிய கல்விக் கொள்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து, முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பிரதமரை முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது, இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. இதைத்தான் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது!
மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் @CMOTamilNadu அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது!(1/2)
— Dr S RAMADOSS (@drramadoss) August 3, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...