Published : 03 Aug 2020 07:12 AM
Last Updated : 03 Aug 2020 07:12 AM
கமலின் தலைமையை ஏற்றால் கூட்டணி, இல்லாவிட்டால் தனித்துப் போட்டி என்ற திட்டத்துடன் தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். அதற்கான வாய்ப்பு உள்ள கட்சிகளுடன் அரசியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி அமைக்கவும் தயாராக உள்ளோம். இருப்பினும், மக்கள் நீதி மய்யம் தலைமையை ஏற்று கமலை முதல்வர் வேட்பாளராக அங்கீகரிக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம்.
இது ஒருபுறம் இருக்க, தேர்தலை தனித்து சந்திக்கவும் தயாராக உள்ளோம். அதற்கேற்ப பிரச்சாரம், வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் கடந்த 2 மாதங்களாக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 6 மாதங்களாக சரியாக பணியாற்றாத நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட்டு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தங்களது பணிகளை முறையாக செய்யாதவர்கள் மாற்றப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள கமல், நேரடியாக நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார். சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் மீதான புகார்களை அனுப்பவாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரியும் அளித்துள்ளார். அந்த புகார்களை கமல் நேரடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தேர்தலை தனித்து சந்திக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்
களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT