Last Updated : 02 Aug, 2020 07:04 PM

 

Published : 02 Aug 2020 07:04 PM
Last Updated : 02 Aug 2020 07:04 PM

புதிய கல்விக் கொள்கை பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது; ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 

புதுச்சேரி

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை பல குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று(ஆகஸ்ட் 2) கூறியதாவது:

''புதுச்சேரியில் 10 சதவீதம் பேர் மட்டும் தீவிர சிகிச்சை அளிப்பதற்காக இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஜிப்மரிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள 80 சதவீதம் பேரில் 20 சதவீதம் பேர் மிகக் குறைந்த பாதிப்பும், 30 சதவீதம் பேர் நடுத்தர பாதிப்பும் உள்ளர்வர்கள். மீதியுள்ள 30 சதவீதம் பேருக்கு முறையாக சிகிச்சை அளித்தால் குணமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதுச்சேரி அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவின் கணக்குப்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதி மொத்த பாதிப்பு 6 ஆயிரமாகவும், அதில் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும் இருப்பார்கள். அவர்களில் சுமார் 600 முதல் 700 பேர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டியவர்களாக இருப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருத்துவக் கருவிகள் மற்றும் மருத்துவர், செவிலியர்கள், ஏ.என்.எம்கள், ஆஷா பணியாளர்களை நியமிப்பது சம்பந்தமாக கடந்த 31 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எடுத்து வருகிறார்.

புதுச்சேரி பகுதியில் கரோனா தொற்று அதிகமாவதற்குக் காரணம், நாம் அதிகப்படியான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்கிறோம். நகரப் பகுதியில் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. அதேபோல் ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள கரோனா தொற்றின் தாக்கம் ஏனாம் பகுதியில் இருக்கிறது. அமைச்சர் மல்லாடியும், மாவட்ட ஆட்சியரும் ஏனாம் சென்று பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைத்து மருத்துவம் பார்ப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளனர். மாகேவில் ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லை. அது தற்போது பச்சை மண்டலமாக மாறியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒருபுறம் மருத்துவப் பரிசோதனையை அதிகப்படுத்துவது, மறுபுறம் நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளிப்பது, இன்னொருபுறம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது. இதன் மூலமாக படிப்படியாக புதுச்சேரியில் கரோனா தொற்றின் தாக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் சித்த மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது. ஆகவே நம்முடைய மருத்துவர்களிடம் கூறி சென்னைக்குச் சென்று சித்த மருத்துவமனையைப் பார்வையிட்டு எந்த முறையில் அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்து நம்முடைய மாநிலத்திலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

புதுச்சேரியில் மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ மையம் இருக்கிறது. இந்த மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ மையத்தையும், புதுச்சேரி அரசு மருத்துவ மையத்தையும் ஒருங்கிணைத்து இங்குள்ள ஒரு மருத்துவமனையில் சித்தா முறையில் சிகிச்சை பெற விரும்பும் கரோனா நோயாளிகளைத் தங்கவைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அது வெகுவிரைவில் தொடங்கும். கரோனா தொற்று பாதித்தவர்களில் பலர் சித்த மருத்துவம் மூலம் குணமடைந்து செல்கின்றனர். ஆகவே, புதுச்சேரியிலும் சித்த மருத்துவ முறையில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மாநில அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கிறோம்.

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கை பல குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. பல மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று சொல்கின்றனர். ஆனால், வேத பாடசாலை திட்டத்தைக் கொண்டு வருகின்றனர். குலக் கல்வியைக் கொண்டு வர விரும்புகின்றனர். கட்டாய மொழியாக மும்மொழித் திட்டம் வேண்டும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி புதிய கல்விக் கொள்கையானது வேலையை நோக்கிச் செல்கிறது என்று சொல்கின்றனர். ஆனால் அதனை முழுமையாகப் படித்துப் பார்க்கும்போது மக்களுக்குப் பயன்படுகின்ற திட்டத்தைக் கொடுக்காததாக இருக்கிறது. வடமாநிலங்களைப் போன்று தென்மாநிலங்கள் இல்லை.

புதுச்சேரி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலம். புதுச்சேரி மாநிலம் கல்வி கேந்திரமாக இருக்கிறது. நம்முடைய பாடத்திட்டங்கள், கல்விக் கொள்கைகள் எல்லாம் வேலைவாய்ப்பை நோக்கிச் செல்கிறது. புதுச்சேரியை சேர்ந்த பல ஆயிரம் மாணவர்கள் மருத்துவம், பொறியியல், சமூகவியல் உள்ளிட்ட பல துறைகளில் தேர்ச்சி பெற்று பல துறைகளில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு நம்முடைய மாநிலத்தில் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் வேலைவாய்ப்பு கிடைத்துப் பயன் பெறுகின்றனர்.

இந்தப் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருவதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை. ஆனால், மத்திய அரசானது இதற்கான நிதியை எங்கிருந்து கொண்டு வரப்போகின்றது. மாநிலங்களின் மீது சுமத்தப் போகின்றனரா? என்பது தெளிவுபடக் கூறப்படவில்லை.

கட்டாயக் கல்வி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பில் இருந்து பல்கலைக்கழக கல்வி வரை நாம் இலவசக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம். மத்திய அரசு இப்போதுதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருகின்றனர்.

12 ஆம் வகுப்புவரைதான் கட்டாயக் கல்வி என்று கூறுகின்றனர். அதுபோல் வகுப்பு கட்டணத்தை 12 ஆம் வகுப்பு வரைதான் அறிவித்துள்ளனர். ஆனால், நாம் ஏற்கெனவே கல்லூரிப் படிப்பு வரை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். ஆகவே, புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசின் திட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. அதுமட்டுமின்றி சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு மத்திய அரசு முனைகிறது. இந்திய நாட்டில் பல கலாச்சாரம், பல மொழிகள், மதங்கள் இருக்கும்போது மாநிலத்துக்கு ஏற்றாற்போல் கல்விக்கொள்கை இருக்க வேண்டுமே தவிர மத்திய அரசு விரும்புவது போல் அது இருக்கக்கூடாது.

இது சம்பந்தமாக நடைபெற்ற கல்வியமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் கமலக்கண்ணன் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து புதுச்சேரி மாநில அரசின் நிலையை தெளிவாகக் கூறியுள்ளார். எங்கள் மாநில அரசின் திட்டமானது இருமொழிக் கொள்கையாக இருக்க வேண்டும். தாய்மொழியாக தமிழும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்க வேண்டும். இந்தியை விருப்பப்பட்டால் படிக்கலாம் என்று கூறியுள்ளோமே தவிர இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்கக்கூடாது என்பது எங்கள் அரசின் கொள்கை. அது மக்களின் விருப்பம். ஆகவே, மத்திய அரசு இந்தியைத் திணிப்பதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். புதுச்சேரி மாநிலத்துக்கு என்று தனி பாரம்பரியம் இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 5 அரசு அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை நாம் மக்களுக்கு கொடுத்துள்ளோம். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி.

ஏற்கெனவே பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காலத்தால் பிரெஞ்சு பத்திரங்கள், பிரெஞ்சு சட்டங்கள் நடைமுறையில் இருப்பதால் பிரெஞ்சு மொழியையும் நம்முடைய ஆட்சி மொழியாக வைத்துள்ளோம். ஆகவே மற்ற மாநிலங்களைக் காட்டிலும் புதுச்சேரி தனித்தன்மை வாய்ந்த மாநிலம். மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மக்களின் கருத்துகளைக் கேட்டு புதிய கல்விக் கொள்கை தொடர்பாக எங்களுடைய கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிப்போம். அது சம்பந்தமான விவாதத்தை அமைச்சரவையில் வைத்துப் பேச நடவடிக்கை எடுக்கிறோம். புதிய கல்விக் கொள்கை சம்பந்தமான விரிவான அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன் பிறகு இது சம்பந்தமாக மாநில அரசு முடிவு எடுக்கும்.

இப்போது கரோனா தொற்றுக் காலத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பாடங்கள் ஆன்லைன் மூலம் கொடுக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையான இப்போது இருக்கின்ற சூழ்நிலையையொட்டி இருக்க வேண்டும். பொதுவாக அனைத்து மாணவர்களும் பள்ளி, கல்லூரிக்குச் சென்று படிப்பதற்கு ஏதுவாக இல்லாதபோது மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவி செய்ய வேண்டும். மாணவர்கள் காணொலி காட்சிகள் மூலம் படிப்பதற்கான வசதிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும்''.

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x