Published : 02 Aug 2020 06:02 PM
Last Updated : 02 Aug 2020 06:02 PM
கரோனா தொற்று சிகிச்சைக்கான மருத்துவமனைகள் நிரம்பிவிட்டதால் புதுச்சேரியில் தொற்று உறுதியான பிறகும் கரோனா நோயாளிகள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. பரிசோதனைக் கருவிகள் போதிய அளவு இல்லாததால் முடிவுகளும் தாமதமாகி தொற்று பரவுகிறது. இதனால் மக்கள் தவிப்பில் உள்ளனர்.
புதுச்சேரியில் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழு கரோனா மருத்துவமனையாக உள்ளது. இங்கு 600 படுக்கை வசதிகள் உள்ளன. அதேபோல் ஜிப்மரில் 500 படுக்கை வசதி உள்ள கோவிட் மருத்துவமனையாக உள்ளது. இரு மருத்துவக் கல்லூரிகளிலும் படுக்கைகள் நிரம்பி உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 250 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து கரோனா தொற்று அதிகமாகி அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இன்று மட்டும் கரோனா தொற்று உறுதியான 88 பேர் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் காத்திருப்பில் உள்ளதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முடிவுகள் வருவதில் புதுச்சேரியில் தாமதம்
புதுச்சேரியில் தினமும் பரிசோதனை அதிகரித்தாலும் முடிவுகள் தெரிவதில் தாமதம் ஏற்படும் சூழல் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை தரப்பில் விசாரித்தபோது, "மத்திய அரசின் ஜிப்மரில் இரண்டு ஆய்வுக் கூடங்களும் 7 பரிசோதனைக் கருவிகளும் உள்ளன. புதுச்சேரி மட்டுமில்லாமல் அருகாமை மாவட்டத்தினரும் இங்கு வருகின்றனர். நாள்தோறும் 500 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்படுகிறது. மறுநாள் முடிவு வருகிறது. புதுச்சேரியிலுள்ள இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் ஒரு ஆய்வுக் கூடமும், ஒரு பரிசோதனைக் கருவியும் மட்டுமே உள்ளது. நாளொன்றுக்கு 190 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. அத்துடன் இங்கிருந்து நூறு உமிழ்நீர் பரிசோதனைகள் ஜிப்மருக்கு அனுப்பப்படுகிறது. இந்திராகாந்தி மருத்துவமனையில் நாள்தோறும் 280 பேர் முடிவுகள் மட்டுமே தெரிகிறது.
மீதமுள்ளதை அடுத்த நாள் பரிசோதனைக்குக் கொண்டு செல்கின்றனர். அத்துடன் தொகுதிவாரியாக கரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது எடுக்கப்படுவதால் உடன் முடிவுகள் தெரிவிக்கப்படுவதில்லை. முடிவுகள் வர 3 முதல் 5 நாட்களுக்கு மேல் ஆவதால் கரோனா பரவுதலும் அதிகரிக்கிறது. உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பரிசோதனைக் கருவிகளை அதிகரிப்பது அவசியம்" என்று குறிப்பிடுகின்றனர்.
மோசமான பராமரிப்பு எனப் புகார்
இச்சூழலில் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டோர் அங்குள்ள சூழலை விமர்சிக்கின்றனர். "இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் 50 பேருக்கு ஒரு கழிவறை, ஒரு குளியலறை மட்டுமே உள்ளது. அதுவும் தூய்மையாகப் பராமரிப்பதில்லை. புகார் தெரிவித்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் புதுச்சேரியில் இருக்கும் பலரும் ஜிப்மரை நோக்கிச் செல்கின்றனர். அங்கும் படுக்கைகள் நிரம்பி விட்டதால் எங்களுக்குத் தெரிந்த பலரும் பரிசோதனை எடுக்கத் தயக்கம் காட்டுகின்றனர்" என்று குறிப்பிடுகின்றனர்.
தற்போது புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தற்போது தனது தொகுதியான ஏனாமில் முகாமிட்டுள்ளார். அங்கு மட்டும், கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோருக்கு முட்டை, சிக்கன், பிரியாணி, வேர்க்கடலை தரப்படுகிறது.
இதைச் சுட்டிக்காட்டி புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் மாநிலத் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் கூறுகையில், "புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. நான்குக்கும் சுகாதாரத்துறை அமைச்சராக மல்லாடி கிருஷ்ணாராவ் செயல்படவில்லை. கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோருக்கு வேறுபாடு இல்லாமல் புதுச்சேரி முழுக்க அனைத்து பிராந்தியங்களிலும் சமமான உணவு தரவேண்டும்" என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி மாநில அதிமுக சட்டப்பேரவை கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில், "முதல்வர் நாராயணசாமி உடனடியாக 10 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் உண்மையில் ஜிப்மர், அரசு இந்திராகாந்தி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கியுள்ள படுக்கை எண்ணிக்கை அனைத்தையும் சேர்த்தால் 1500 படுக்கைகளுக்கு மேல் இல்லை. மீதமுள்ள 8,500 படுக்கை வசதிகளுக்கு முதல்வர் என்ன திட்டத்தை வைத்துள்ளார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நம் அரசிடம் மானிய உதவி பெற்று புதுச்சேரியில் கட்டப்பட்டுள்ள நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை அரசு அவசர மருத்துவமனையாகச் செயல்படுத்த வேண்டும்.
போதிய மருத்துவர்கள், மருத்துவ உதவிகள் இல்லாததை உள்ளிருப்பு கரோனா நோயாளிகள் தனது வாட்ஸ் அப்பில் பதிவு செய்வதைக் கேட்கும்போது மனம் பதைபதைக்கிறது. இதில் கூட அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT