Published : 02 Aug 2020 04:28 PM
Last Updated : 02 Aug 2020 04:28 PM

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை: தாக்கிய காவல் ஆய்வாளரைக் கைது செய்ய வேண்டும்; ரூ.25 லட்சம் இழப்பீடு; ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

வாடகை தராதது சிவில் சிக்கல். இந்தச் சிக்கலில் காவல்துறை ஆய்வாளர் தலையிட்டு அத்துமீறியதும், வருவாய் இன்றி வாடிய தொழிலாளியை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் முன் கண்மூடித்தனமான தாக்கியதும் மன்னிக்க முடியாதவை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

''சென்னையை அடுத்த புழல் விநாயகபுரத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் முன்பு புழல் காவல்துறை ஆய்வாளர் தாக்கியதால் அவமானமடைந்து தீக்குளித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவல் ஆய்வாளரின் மனிதநேயமற்ற இந்த அத்துமீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, தண்டிக்கப்பட வேண்டியதும் ஆகும்.

கூலித்தொழிலாளி எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. ஊரடங்கு ஆணை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாததால், வருமானமின்றி வாடியுள்ளார். அதனால் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற சூழலில் வாடகை செலுத்த முடியாமல் ஏராளமானோர் உள்ளனர்.

அவர்களிடம் பெரும்பான்மையான வீட்டு உரிமையாளர்கள் கனிவுடன்தான் நடந்து கொள்கின்றனர். வாடகை செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களிடம் கட்டாயப்படுத்தி வாடகை வாங்கக் கூடாது என அரசே கூறியுள்ளது. ஆனால், வாடகை செலுத்தாத சீனிவாசன் மீது அவரது வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் செய்தது மனிதநேயமற்ற செயல் என்றால், அதனடிப்படையில் அவரைக் காவல்துறை ஆய்வாளர் வீடு புகுந்து தாக்கியது சட்டவிரோதச் செயலும், குற்றமும் ஆகும்.

காவல்துறை பயிற்சியின்போது எந்தெந்த சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என கற்றுத் தரப்படுகிறது. வாடகை தராதது சிவில் சிக்கல். இந்தச் சிக்கலில் காவல்துறை ஆய்வாளர் தலையிட்டு அத்துமீறியதும், வருவாய் இன்றி வாடிய தொழிலாளியை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் முன் கண்மூடித்தனமான தாக்கியதும் மன்னிக்க முடியாதவை.

சாத்தான்குளம் நிகழ்வுக்குப் பிறகு காவல்துறையில் உள்ள சிலர் செய்யும் இத்தகைய செயல்களால் மொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. புழல் காவல் ஆய்வாளர் பென்சாம் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தற்கொலை செய்துகொண்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தத் தொழிலாளியின் குடும்பதிற்கு பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x