Published : 02 Aug 2020 01:44 PM
Last Updated : 02 Aug 2020 01:44 PM

புதிய கல்விக் கொள்கை; இந்தியக் கல்வி முறையை உலகத் தரத்துக்கு உயர்த்தும்: எல்.முருகன் நம்பிக்கை

சென்னை

கல்வியை அழியாத செல்வம் என்பார்கள். ஆனால் அந்தக் கல்வியை அடைய வேண்டும் என்றால், செல்வத்தை இழக்க வேண்டியுள்ளது. ஏழை, பணக்காரர், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள பாகுபாடுகள், இப்புதிய கல்விக் கொள்கையால் முற்றிலும் மறைந்துவிடும் என தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி முறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கி இந்தியப் பள்ளிகளின் கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்தும், மிகச் சிறந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புகழ்பெற்ற விஞ்ஞானியும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான டாக்டர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான “தேசிய கல்வி வரைவுக் கொள்கைக்கான குழு” ஜூன் 2017-ல் அமைக்கப்பட்டது. இக்குழு மே 31-2019 அன்று தங்களது தேசிய வரைவுக் கொள்கையை அளித்தது.

ஏறத்தாழ ஓராண்டு காலம் இணையதளத்திலும், மற்றும் பல்வேறு வழிகளில் ,பொதுமக்கள் உள்ளிட்ட தொடர்புடையவர்களிடமிருந்து அவர்களது பார்வைகள், ஆலோசனைகள், கருத்துகள் பெறப்பட்டன.

இந்தியாவை வலிமையான அறிவாற்றல் மிக்க சமுதாயமாக, உலக அளவில் அறிவாற்றலில் சிறந்த சக்தியாக மாற்றும் நோக்கத்துடன், தேவைக்குரிய மாற்றங்கள் செய்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மையை, திறமையை வெளிக்கொணரும் வகையில் புதிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது.

மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும், பள்ளிக் கல்விக்கு உலக அளவிலான அணுகுமுறையை புதியக் கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. உலக அளவில் நம் மாணவர்கள் போட்டி போடுவதற்கு, இப்புதிய கல்விக் கொள்கை அடிப்படையாக அமைவது உறுதி. அறிவு, கற்றல், ஆற்றல் அனைவருக்கும் சொந்தம் என்பதை இக்கொள்கை வலியுறுத்துகிறது.

கல்வியை அழியாத செல்வம் என்பார்கள். ஆனால் அந்தக் கல்வியை அடைய வேண்டும் என்றால், செல்வத்தை இழக்க வேண்டியுள்ளது. ஏழை, பணக்காரர், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள பாகுபாடுகள், இப்புதிய கல்விக் கொள்கையால் முற்றிலும் மறைந்துவிடும்.

நாடு முழுவதும் சமமான கல்வி கற்பிக்கலாம். குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் தாய்மொழிக் கல்வி மூலம் பயில்வதன் காரணமாக, பள்ளிக்கு வரும் குழந்தைகள் உற்சாகப்படுத்தும், கற்பதை உணர்ந்தும் கல்வி கற்றிட வழி வகுக்கும். பள்ளிக்குச் செல்லாத ஏறத்தாழ 2 கோடி குழந்தைகள் பள்ளிக் கூடங்களை நோக்கி வருவதற்கு வாய்ப்பை உருவாக்கும்.

21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற முக்கியமான திறமைகளை ஏற்படுத்துவதோடு, அவசியமானவற்றைக் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கேற்ப பாடத்திட்டத்தைக் குறைப்பதுடன், சோதனை அடிப்படையிலான கல்வி மற்றும் சிந்தனைக்கு, பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படும். பாடப்பிரிவினை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும். கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் என மாணவர்கள் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட மாட்டார்கள்.

பாடத்திட்டம் மட்டுமல்லாமல், பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டவற்றைக் கற்பதற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதலே தொழில் கல்வி பயிற்றுவிக்க இருப்பது மாணவர்கள் வளர, வளர அவர்கள் தன்னம்பிக்கையையும், சிறப்பு தேர்ச்சியினையும் உயர்த்தும் என்பது உறுதி. இளைஞர்கள் வேலை தேடாமல், வேலை கொடுக்கும் ஆற்றல் மிக்கவர்களாக உருவாவார்கள்.

புதிய கல்விக் கொள்கை 2020, எந்தக் குழந்தையும் சமூக சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ, கல்வி கற்பதில் சிறந்து விளங்கும் எந்த வாய்ப்பையும் இழந்து விடக் கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்துப் பிரிவு குழந்தைகளுக்கும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆசிரியர்கள் பணி நியமனம், செயல்திறன் மதிப்பீடு, வலுவான, வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில் நடைபெறும். ஆசிரியர்களுக்கான தேசிய தொழில் முறைத் தரம் என்ற பொது அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

உலகத் தரத்திற்கு இனையாக சிறந்த பன்னோக்கு கல்வி வழங்கும் மாதிரி அமைப்பாக , ஐ.ஐ.டிக்களுக்கு இணையான கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைகழகங்கள் அமைக்கப்படுவது மிகச் சிறந்த ஒன்றாகும். கல்வித்துறைக்கு புதிய அமைப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர்களுக்கான திட்டங்கள் என உலகத்தரத்திற்கு நிகரான கல்வி நிலையை நம் நாட்டிலும் உருவாக்க, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை, ஏறத்தாழ இன்றைய நிலையில் 16 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்திட திட்டமிடப்படும். இதன் காரணமாக, புதிய கல்விக் கொள்கையின் நோக்கங்கள் முழுமை அடையும் என்பது உறுதி.

புதிய கல்விக் கொள்கையில், தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 130 கோடி இந்திய மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கை இளம் தலைமுறையினர் தர்சார்புடன் விளங்கவும், இந்தியா உலகின் கல்வி மையமாகவும் விளங்க உதவும் என்று நேற்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

மும்மொழித் திட்டம் என்பது தமிழ்நாட்டைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் இப்போதும் செயல்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி என்பது எந்த மாநிலத்திலும் கட்டாயப்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களைச் செய்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. மாணவர்களின் எதிர்காலத்துக்கானது. அவர்கள் வாழ்வில் ஒளி வீசச் செய்திடப்போவது. இதையும் சுய நோக்கத்தோடு, காழ்ப்புணர்ச்சியோடு விமர்சிப்பதைக் கண்டிக்கிறேன். புதிய கல்விக் கொள்கை பற்றி விமர்சிக்க முன் வருபவர்கள் அதை முழுமையாகப் படித்து உணர வேண்டும்”.

இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x