Published : 02 Aug 2020 12:39 PM
Last Updated : 02 Aug 2020 12:39 PM
2 நாட்களுக்கு முன் சென்னையில் உருவாக்கப்பட்ட சைபர் பிரிவு காவல் நிலையத்தில் முதல் புகாராக ஆன்லைனில் வகுப்பு எடுக்கும்போது வெளிநபர்கள் குறுக்கிட்டு இடையூறு செய்ததாக அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள 12 காவல் துணை ஆணையர் அலுவலகங்களில் 12 சைபர் பிரிவு காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டது. சைபர் சார்ந்த குற்றங்களை இப்பிரிவில் அந்தந்த பகுதி மக்கள் நேரடியாக அளிக்கலாம் எனக்கூறப்பட்டது.
இந்நிலையில் அண்ணா நகர் துணை ஆணையர் காவல் மாவட்டத்தில் புகார் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது. ராஜமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் அண்ணாநகர் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ராஜமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஜூலை 28-ம் தேதி 9-ம் வகுப்பு பாடப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு நடந்துக் கொண்டிருந்தபோது திடீரென உள்ளே குறுக்கிட்ட வெளி நபர் ஒருவர் வகுப்பை சீர்குலைக்கும்வண்ணம் மோசமாக பேசியுள்ளார்.
9-ம் வகுப்பு மாணவர்கள் பாடம் படிக்கும் ஆன்லைன் வகுப்பில் இதுபோன்ற தொந்தரவுகள் மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக இருந்த நிலையில் அவர்கள் மனநிலையை பாதிக்குமாறு ஏற்படுத்திய இடையூறு குறித்து ராஜமங்கலம் போலீஸில் அளிக்கப்பட்ட புகார் அண்ணா நகர் சைபர்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
வகுப்பு நடந்துக்கொண்டிருக்கும்போதே சட்டவிரோதமாக பள்ளியின் இணையதளத்தில் புகுந்த ஒருநபர் கண்டபடி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள் யாரும் இதில் ஈடுபடவில்லை, வெளி ஆட்களே இதில் ஈடுபட்டுள்ளனர், பள்ளியின் இணயதள பாஸ்வார்டை தெரிந்துக்கொண்டு இடையூறு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட முதல் சைபர்பிரிவு காவல் நிலையங்களில் முதல் புகாராக ஆன்லைன் வகுப்பில் குறுக்கிட்டு இடையூறு செய்தது குறித்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் வகுப்புக்கு மாறிக்கொண்டிருக்கும் சூழலில் ஆன்லைன் வகுப்புகளில் இடையிடையே ஆபாச தளங்கள் குறுக்கிடுகிறது, மாணவர்கள் கவனச் சிதறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவி ஒருவரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேப்போன்று தமிழக பள்ளிக்கல்வித்துறையும் ஆன்லைன் வகுப்பு குறித்து தனது வழிகாட்டுதலில் பாதுகாப்பான முறையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது எப்படி, ஒருவேளை இடையூறுகள், தவறான செயல்கள் நடக்கும்பட்சத்தில் எவ்வாறு அதை கையாளலாம், எப்படி புகார் அளிக்கலாம், என்ன பிரிவுகள் உள்ளது என தெளிவாக வழிகாட்டுதலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT