Published : 02 Aug 2020 11:41 AM
Last Updated : 02 Aug 2020 11:41 AM

ஆள் பற்றாக்குறையால் கொய்யா செடி உற்பத்தி பாதிப்பு: தோட்டக்கலைத்துறை மூலம் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் பகுதியில் கொய்யா ஓட்டுச்செடி தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய தொழிலாளர்கள்.

கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி பகுதியில் ஆள் பற்றாக்குறையால் கொய்யா செடிகள் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை மூலம் தமிழக அரசே கொய்யா செடிகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என கொய்யா செடி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, சந்தூர், பனங்காட்டூர், அரசம்பட்டி, மஞ்சமேடு, பண்ணந்தூர், ஜெகதேவி பகுதிகளில் உள்ள விவசாயிகள் கொய்யா செடி உற்பத்தியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழையைப் பொறுத்து, இப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நர்சரிகளில் இருந்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு லட்சக்கணக்கில் கொய்யா செடிகள் அனுப்பப்படுகிறது. தற்போது விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, ‘‘மாஞ்செடி உற்பத்தி போன்று, கொய்யாவும் ஓட்டுச்செடியில் உற்பத்தி செய்யப்படுகிறது. கொய்யா நாற்றை எடுத்து, நன்கு வளர்ந்துள்ள தாய் செடியில் உள்ள கிளைகளை சீவி தண்ணீர் புகாத வகையில் பிளாஸ்டிக் பையினால் கட்டி இணைப்பது முதல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது வரை ஒரு செடி உற்பத்தி செய்ய அதிகபட்சம் 3 மாதங்கள் ஆகிறது. வெளியூரில் இருந்து விவசாயிகள் நேரடியாகவே வந்து கொள்முதல் செய்கின்றனர். கொய்யா செடி உற்பத்தியின் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

தற்போதைய சூழலில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், கொய்யா செடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை நர்சரி பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை கொய்யா செடிகளை அரசே தோட்டக்கலைத்துறை மூலம் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வந்தது. தற்போது, கொய்யா செடிகள் கொள்முதலை அரசு நிறுத்தியுள்ளதால், உற்பத்தியாளர்கள், தொழி லாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் அரசு கொய்யா செடிகளை கொள்முதல் செய்ய வேண்டும்,’’ என்றனர். எஸ்.கே.ரமேஷ் 


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x