Published : 02 Aug 2020 08:08 AM
Last Updated : 02 Aug 2020 08:08 AM
ஆடிப்பெருக்கை முன்னிட்டு2021-ம் ஆண்டுக்கான காலண்டர்கள் தயாரிப்பு பணி சிவகாசியில் இன்று தொடங்குகிறது. கரோனாஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு 30 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக காலண்டர்உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலுக்கு அடுத்ததாக அச்சுத்தொழில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று அடுத்த ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு சிவகாசியில் தொடங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான தினசரி, மாத காலண்டர்கள் தயாரிக்கும் பணி சிவகாசியில் இன்று (2-ம் தேதி) தொடங்கப்படுகிறது. ஆனால், இதுவரை இல்லாத அளவில் கரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு 30 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக காலண்டர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் ஜெயசங்கர் கூறியதாவது: சிவகாசியில் தினசரி காலண்டர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் 200-க்கு மேற்பட்ட மாடல்களில் தயார் செய்யப்படுகின்றன. சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மட்டும் 100-க்கு மேற்பட்ட சிறிய மற்றும் பெரியளவில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் அச்சு கூடங்கள் இயங்கி வருகின்றன.
இத்தொழிலில் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2021-ம் ஆண்டுக்கான புதிய காலண்டர்கள் தயாரிப்பு பணிகள் ஆடிப் பெருக்கு அன்று தொடங்கப்படுவது வழக்கம். நாள்காட்டி ஆல்பம் வெளியீடு என்றால் ஆடி மாதம் 18-ம் தேதி அன்று தான் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள வழக்கம்.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் முகவர்கள், விற்பனையாளர்கள் பலர் நேரில் வந்து காலண்டர் தயாரிப்பு புதிய ஆல்பத்தை பெற்றுச்சென்று ஆர்டர்கள் வாங்குவார்கள்.
ஆனால், இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, அரசின் முழுஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைக்கும் வகையில் 50 ஆண்டுகால வழக்கத்தை மாற்றி, ஆடி 18 அன்று காலண்டர் ஆல்பம் வெளியிடுவதைத் தவிர்த்து, வேறொரு நாளில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
மேலும், ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் காலண்டர் தயாரிப்புப் பணிகள் 100 சதவீத பணியாளர்களுடன் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு, ஊரடங்கால் 50 சதவிகித பணியாளர்கள், அதிலும் கரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வர இயலாத பணியாளர்கள் போன்ற காரணங்களால், 70 சதவீத உற்பத்தியை மட்டுமே மேற்கொள்ள இயலும். அதுவும் விரைவில் ஆர்டர்கள் கிடைத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால், 30 சதவீதத்துக்கு மேலும் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT