Published : 02 Aug 2020 08:01 AM
Last Updated : 02 Aug 2020 08:01 AM

2017-ம் ஆண்டு ராதாபுரத்தில் வழக்கறிஞரை தாக்கியதாக புகார்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீஸார் மீது சிபிசிஐடி வழக்கு

திருநெல்வேலி

ராதாபுரம் காவல் நிலையத்தில் வைத்து வழக்கறிஞரை தாக்கியது தொடர்பான புகாரில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீஸார் மீது திருநெல்வேலி சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பழவூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜரத்தினம். கடந்த 3.11.2017-ம் தேதி விசாரணை எனும் பெயரில் தன்னை ராதாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, தனிப்பிரிவு போலீஸார் தாக்கியதாக, அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அதன்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை கோரி, திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகார் மீது விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய கடந்த 2018-ல் உத்தரவிட்டது. ஆனாலும் போலீஸார் காலம் தாழ்த்தியதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜரத்தினம் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க, கடந்த பிப்ரவரி 2-ம் தேதி உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

அதன்படி, திருநெல்வேலி சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து, அப்போதைய வள்ளியூர் டிஎஸ்பி குமார், பணகுடி இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்டீபன் ஜோஸ், சப்- இன்ஸ்பெக்டர்கள் பழனி, விமல்குமார், முகமது சம்சீர், சிறப்பு பிரிவு போலீஸார் செல்லதுரை, சாகர், ஜோஸ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படும் வகையில் தாக்குதல், வீடு புகுந்து தாக்கி ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x