Published : 02 Aug 2020 07:27 AM
Last Updated : 02 Aug 2020 07:27 AM
இ-பாஸ் கெடுபிடி காரணமாக நியாயமான காரணங்களுக்கும் பயணம் மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் வேதனையில் தவிக்கின்றனர். மேலும் பல காரணங்களுக்காக இ-பாஸ் வழங்க வேண்டும். அல்லது இ-பாஸ் நடைமுறையையே ரத்து செய்து விடலாம் என்று வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே நிச்சயம் செய்யப்பட்ட திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை,இறப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டுமே மாவட்டம்விட்டு மாவட்டம்செல்ல முடியும். அதற்கு http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இ-பாஸ் பெறுவது கட்டாயம். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியூர்களில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்டோர் இ-பாஸ் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், மேற்கூறிய காரணங்களுக்காக உரிய ஆவணத்துடன் விண்ணப்பித்தாலும் பலருக்கும் இ-பாஸ் கிடைப்பதில்லை. சென்னை கொளத்தூரைச் சேர்ந்தஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிஒருவர், தனது மகளின் திருமணத்துக்காக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக, வெளியூர்களில் சிக்கி தவிப்பவர்கள், பணியாளர்களின் விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன. ஒருமுறை ஒரு செல்போன் எண்ணை பதிவிட்டுவிண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், பிறகுஅந்த எண்ணைக் கொண்டு, சரியான ஆவணங்களுடன் எத்தனை முறை விண்ணப்பித்தாலும், அவை நிராகரிக்கப்படுகின்றன.
துக்க நிகழ்வுகள்
இறுதிச் சடங்குகளுக்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றால், இறப்புச் சான்று கட்டாயம். துக்க வீடுகளில் இறப்புச் சான்று பெற்று,தொடர்புடைய நபருக்கு அனுப்பிவைக்கும் மனநிலையில் அவர்கள் இருப்பதில்லை. இதனால் பலர்துக்க நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமல், வேதனை அடைகின்றனர்.
அதேநேரம், செல்வாக்கு மிக்கவர்கள் இ-பாஸ் இல்லாமல், அரசுகூறிய 4 காரணங்கள் இன்றி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணங்களுக்கு, ஆவணம் இல்லாவிட்டாலும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஏழை, நடுத்தரமக்கள் நியாயமான காரணங்களுக்கு ஆவணத்துடன் விண்ணப்பித்தாலும் நிராகரிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
‘சரியான ஆவணத்தைதான் பதிவேற்றம் செய்துள்ளேன்’ என தெரிவிக்கவும் யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது.
உடல்நலம் மோசமாகி, இறக்கும் நிலையில் உள்ள பெற்றோர், நெருங்கிய உறவினரை பார்க்க இ-பாஸ் வழங்குவதே இல்லை. இதனால், கடைசியாக ஒருமுறை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கமும் பலரை வாட்டுகிறது.
தற்போது மேல்நிலைப் பள்ளி,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைநடைபெறும் காலம். ஆன்லைனில்விண்ணப்பிக்கும் வசதி இருந்தாலும், விரும்பும் பள்ளி, கல்லூரியின்வளாக அமைப்பு, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி போன்றவற்றை நேரில் பார்க்கும்போதுதான் மனநிறைவைத் தரும். இதுபோன்றவற்றுக்கு இ-பாஸ் கிடைக்காததால் பெற்றோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
நின்றுபோன திருமணங்கள்
ஊரடங்கு தொடங்கும்போது ஒரு பவுன் தங்கம் விலை ரூ.33 ஆயிரமாக இருந்தது. ஆகஸ்ட் 1-ம் தேதிநிலவரப்படி ரூ.46 ஆயிரமாக (செய்கூலி, சேதாரத்துடன்) விலை உயர்ந்துள்ளது. ஆனால், ஊரடங்கு முன்புநிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு நகை வாங்க மாவட்டம்விட்டு மாவட்டம் செல்ல தற்போது இ-பாஸ் கிடைப்பதில்லை. இதனால் ஏற்கெனவே பேசி இருந்தபடி நகைவாங்க முடியாமல், பல திருமணங்கள் நின்றுவிட்டதாக மக்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். அதேபோல், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புரோகிதர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
கடும் மன உளைச்சல்
பணி நிமித்தமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களில் உள்ள வயதான, நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறும் பெற்றோரை, அவ்வப்போது சென்று கவனிக்க இ-பாஸ் கிடைக்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
நிலம் இருக்கும் இடம், விற்போர், வாங்குவோர் வெவ்வேறு மாவட்டங்களில் இருக்கும்போது, பத்திரப் பதிவுக்காக பயணிக்க நிலம் வாங்குவோர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் பல பத்திரப் பதிவுகள் நிலுவையில் உள்ளன.
வியாபாரிகள் அவதி
சென்னையில் பெட்டிக் கடைகள், சிறுகடைகள் நடத்திவந்த தென்மாவட்ட வியாபாரிகள் பலர் ஊரடங்கால் சென்னையில் இருந்துசொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சென்னை திரும்ப இ-பாஸ் கிடைக்காமல் அவதியடைந்துள்ளனர்.
ஒருவர் ஓர் மாவட்டத்தில் இருந்துமற்றொரு மாவட்டத்துக்கு செல்லமேற்குறிப்பிட்ட 4 காரணங்கள் மட்டுமே அத்தியாவசியமான காரணங்களாக அரசு கூறுகிறது. உண்மையில் அத்தியாவசிய, நியாயமான காரணங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. அத்தகைய காரணங்களுக்காக பயணிக்க இ-பாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் வேதனையில் தவிக்கின்றனர். எனவே, இ-பாஸ் வழங்குவற்கான அத்தியாவசிய காரணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது ஒரு தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இ-பாஸ் முறை வீண்
மற்றொரு தரப்பினர் கூறும்போது, ‘‘முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது சென்னை ராயபுரம், கோயம்பேடு காய்கறி சந்தை போன்ற பகுதிகளில் இருந்து பிறபகுதிகளுக்கு கரோனா வைரஸ்பரவாமல் இருக்க இ-பாஸ் முறைஉதவியாக இருந்தது. ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே இதுபோன்ற கெடுபிடிகளை சகித்துக்கொள்ள முடியும்.
ஊரடங்கு தற்போது 130-வதுநாளை எட்டியுள்ளது. தற்போது ஏராளமான தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் காய்கறி, மீன் சந்தைகளில் சமூகஇடைவெளியை அரசால் இதுவரைஉறுதிசெய்ய முடியவில்லை. அவற்றில் மெத்தனமாக இருந்துவிட்டு, இ-பாஸ் நடைமுறையில் மட்டும் கெடுபிடி காட்டுவது வீண்.
எனவே, இ-பாஸ் முறையையே ரத்துசெய்ய வேண்டும்’’ என் கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT