Published : 01 Aug 2020 08:54 PM
Last Updated : 01 Aug 2020 08:54 PM
தேனி மாவட்டம் கூடலூரில், கரோனாவால் இறந்த தாயின் உடலை மகன் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று அவலம் நிகழ்ந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் கொடுத்த நெருக்கடியால் இந்த அவலம் நிகழ்ந்ததாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'கரோனா தான் நமது எதிரியே தவிர, கரோனா பாதித்த நோயாளிகள் அல்ல' என அரசு தொடர்ந்து அறிவுறுத்திவந்தாலும் கூட கரோனா பாதித்த நபரை வீட்டை காலி செய்ய சொல்வது, கரோனாவிலிருந்து மீண்டாலும் அவர்களைப் புறக்கணிப்பது போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தேனி மாவட்டம் கூடலூரில் அப்படி ஓர் அவலம் அரங்கேறியுள்ளது.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அழகுபிள்ளை தெருவைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு கடந்த வாரம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு வயிற்றுப்போக்குக்கான சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். அதே வேளையில் அவருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அப்பெண் இறந்தார்.
இது குறித்து கூடலூர் நகராட்சி சுகாதாரப்பிரிவுககுத் தெரிவிக்கப்பட்டது. உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்தினரும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்குள் அப்பெண் வசித்த தெருவாசிகள் இறந்தவரின் மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது. இதனால் இப்பகுதியில் கரோனா பரவும் என்று கூறி உடலை உடனே எடுத்துச் செல்லுமாறும் அப்பெண்ணின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதனால், விரக்தியடைந்த அப்பெண்ணின் மகன் வாடகைக்கு தள்ளுவண்டியை எடுத்துவந்து இறந்த தாயின் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார்.
கரோனா தொற்று பாதித்தவரின் உடல் பாதுகாப்பு இல்லாமல் தள்ளுவண்டியில் முக்கிய வீதிகள் வழியே எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் பரவியது.
தகவல் நகராட்சி நிர்வாகத்துக்கு எட்ட, இறந்த பெண்ணின் சடலத்தை பாதுகாப்பாக தகனம் செய்யத் தேவையான கவசப்பைகளுடன் ஆம்புலன்ஸ் வந்தது. பின்னர் சடலம் பாதுகாப்பாக தகனம் செய்யப்பட்டது.
இது குறித்து கூடலூர் நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறும்போது, "இறந்த பெண்ணின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று தகனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து கொண்டிருந்தோம்.
அதற்குள், அப்பெண்ணின் அண்டைவீட்டார் கடுமையான நெருக்கடி கொடுத்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் அந்தப் பெண்ணின் மகன் உடலை தள்ளுவண்டியில் கொண்டு செல்ல நேர்ந்துள்ளது.
எங்களுக்கு அத்தகவல் கிடைத்ததும் நாங்கள் உடனே சடலத்தைக் கைப்பற்றி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்தோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT