Published : 01 Aug 2020 03:50 PM
Last Updated : 01 Aug 2020 03:50 PM
குமரி மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தமிழகத்தில் மேற்கு கடல் பகுதியில் ஜீன் 1-ம் தேதி முதல் ஜீலை 31-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக உள்ளது. இந்த நாட்களில் விசைப்படகுகள் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபடாது.
இந்த ஆண்டு கரோனா பாதிப்பால் ஏற்கெனவே மீன்பிடி பணியில் பல நாட்கள் முடக்கம் ஏற்பட்டதால் 15 நாட்களை தளர்வு செய்து அரசு தடைக்காலத்தை நிர்ணயம் செய்தது. அதன்படி ஜீன் 15-ம் தேதி முதல் ஜீலை 31-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக பின்பற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடல் பகுதிக்குட்பட்ட மணக்குடியில் இருந்து கேரள எல்லையான நீரோடி வரை மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகள் அனைத்தும நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி ஏலக்கூடங்கள், மற்றும் துறைமுகங்கள் வெறிசோடின.
தடைக்காலத்தைப் பயன்படுத்தி மீனவர்கள் படகுகள், மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தடைக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். குளச்சல், தேங்காய்ப்பட்டணம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து முதல் கட்டமாக 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்றன.
மீன்பிடி பணி மீண்டும் தொடங்கியதால் குமரி மீன்பிடி துறைமுகங்கள் பரபரப்பாகக் காணப்பட்டது. ஒன்றரை மாதத்திற்கு பின்பு ஆழ்கடல் மீன்பிடி பணி தொடங்கியிருப்பதால் அதிகமான அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருப்பதாக குமரி மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT