Published : 01 Aug 2020 03:12 PM
Last Updated : 01 Aug 2020 03:12 PM

சாதி அமைப்பின் பேரில் கட்டப் பஞ்சாயத்து: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?- புதுவை அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி 

சென்னை

புதுச்சேரியில் சாதி அடிப்படையில் நடத்தப்படும் அமைப்பு கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும், அதற்குத் தடை விதிக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துப் பதிலளிக்க காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள 25 குடும்பங்களைச் சேர்ந்த 290 பேர் "வனத்தாய் குடும்ப உறுப்பினர்கள்" என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மீன் பிடித்தல், மீன் விற்பனை, ஐஸ் கட்டிகள் விற்பனை போன்றவை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர்.

வனத்தாய் மீனவக் குடும்பத்தில் உள்ள மூத்தவரான வீரசோழன் குடும்பத்தினரை, அமைப்பிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிளஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த எஸ். வீரசோழன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இதேபோன்ற சம்பவங்கள் 2018-ல் நடந்தபோது மாவட்ட ஆட்சியர் முதல் துணைநிலை ஆளுநர் வரை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சட்டவிரோத அமைப்பான கட்டப் பஞ்சாயத்தை ஒழிப்பது தொடர்பாக புதுச்சேரி அரசும், சென்னை உயர் நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தாலும், கட்டப் பஞ்சாயத்தின் மூலம் ஊரைவிட்டு விலக்கி வைப்பது மீனவ கிராமங்களில் தொடர்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.

ஊரை விட்டு விலக்கிவைத்த உத்தரவால் யாரும் உதவி செய்ய அஞ்சுவதாலும், வேலைக்கு ஆட்களை அமர்த்தத் தயங்குவதாலும் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தற்போது வனத்தாய் குடும்பத்தினர் மீதான உத்தரவு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மே மாதம் 28-ம் தேதி மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தங்களை ஊரைவிட்டு விலக்கி வைத்த செட்டியார், நாட்டார், காரியக்கார், பஞ்சாயத்தார் என்ற அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

சாதி அடிப்படையில் நடத்தப்படும் அந்த அமைப்பு கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடத் தடை விதிக்க வேண்டுமென இடைக்கால கோரிக்கையும் வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகாரின் மீது எடுக்கபட்ட நடவடிக்கை குறித்து காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x