Published : 01 Aug 2020 11:15 AM
Last Updated : 01 Aug 2020 11:15 AM
கடந்த சில மாதங்களாகக் கோவை வனக்கோட்டத்தில் யானைகளின் உயிரிழப்புகள் அதிகரிப்பது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், நெல்லிமலை வனப்பகுதியில் மேலும் ஒரு யானை உயிரிழந்திருப்பது வன உயிர் ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் ஒரு ஆண் யானை உடல்நலக் குறைவு காரணமாகக் கீழே விழுந்தது. மீண்டும் எழ முடியாமல் உயிருக்குப் போராடிய யானைக்கு, வனத்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அந்த யானை நேற்று உயிரிழந்தது.
இந்நிலையில் இறந்த யானையின் உடல், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதன் உடல் பாகங்கள் ஆய்விற்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதுகுறித்துப் பேசிய மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், “மற்ற யானைகளுடன் நடைபெற்ற மோதலில் இந்த யானையின் வாய்ப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவருகிறது. தவிர இந்த ஆண்டில் கோவை வனக்கோட்டத்தில் இறந்த யானைகளில் 4 யானைகள் அவற்றுக்கிடையே நடைபெற்ற மோதலால் காயமடைந்து இறந்திருக்கலாம் என்றே முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பவானி ஆற்றின் நீர்த்தேக்கப் பகுதியான பெத்திக்குட்டை பகுதியில் 8 யானைகள் உடல்நலக் குறைவால் இறந்தது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. யானைகளின் மரணத்துக்குக் காரணம் காட்டுக்குள் பரவிவரும் சீமைக் கருவேல மரங்களா அல்லது நீர் மாசுபாடா என ஆய்வறிக்கைக்குப் பின்னரே தெரியவரும். இது தொடர்பான முழுமையான அறிக்கை கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம். அதுவரை யானைகளின் உடல்நலக் குறைவிற்கு இதுதான் காரணம் என எதையும் உறுதியாகக் கூற முடியாது” என்றார்.
கோவை வனக்கோட்டத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 16 யானைகள் இறந்துள்ளன. கடந்த மாதம் மேட்டுப்பாளையத்தில் ஆண் யானையொன்று சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள சிறுமுகை வனப்பகுதியில் 8 யானைகள் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் இறந்தன.
உயிரிழந்தவை பெரும்பாலும் 20 வயதிற்கு உட்பட்ட யானைகள் என்பதால் இளம் யானைகளுக்கு எப்படி திடீர் உடல்நலக் குறைவு ஏற்படுகிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. யானைகளின் தொடர் மரணங்களுக்கான காரணங்களை இக்குழு கண்டறிந்து ஆறு மாதங்களில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
கர்நாடக, கேரளக் காடுகளை ஒன்றிணைக்கும் மிக முக்கிய வலசைப் பாதை கொண்ட கோவை வனக்கோட்டத்தில் வரிசையாய் யானைகள் இறந்து வருவது குறித்த ஆய்வுகள் துரிதமாகவும் விரிவாகவும் நடைபெற வேண்டும் என்பதே வன உயிர் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT