Published : 01 Aug 2020 08:51 AM
Last Updated : 01 Aug 2020 08:51 AM

நாகர்கோவில் சிறுமி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏவை விசாரித்த 7 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி: சிறைக்கைதிகளுக்கும் நோய்த் தொற்றால் பரபரப்பு

நாகர்கோவில்

நாகர்கோவிலில் சிறுமி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனிடம் விசாரணை நடத்திய டிஎஸ்பி உட்பட 7 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு நிலவுகிறது. முன்னாள் எம்எல்ஏவுக்கு ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மொத்தம் 4,693 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். 1,857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 169 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, கோட்டாறைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 28-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனிடம், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

மறுநாள், நாகர்கோவில் மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது. இந்நிலையில், நாஞ்சில் முருகேசனிடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய டி.எஸ்.பி. உட்பட மேலும் 6 போலீஸார் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாஞ்சில் முருகேசனுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதுவரை 68 போலீஸார் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணியாற்றிய 15 காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும், நாகர்கோவில் சிறையில் பணியில் இருந்த போலீஸார் மற்றும் கைதிகள் 18 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று குழித்துறை கிளைச்சிறையில் 35 வயது கைதிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, குழித்துறை கிளைச்சிறையில் உள்ள மேலும் 14 கைதிகள், போலீஸாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதே சிறையின் பெண்கள் பிரிவில்தான், கோட்டாறு சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள அவரது தாயார் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் தூத்தூர், குளச்சல், வாணியக்குடி, இரையுமன்துறை, வள்ளவிளை, கொல்லங்கோடு, சின்னமுட்டம் போன்ற மீனவ கிராமங்களில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. வாணியக்குடி உட்பட சில கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. `இவ்வாறு பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தால், கரோனா அதிகமாக பரவும் கிராமங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்’ என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x