Published : 01 Aug 2020 08:36 AM
Last Updated : 01 Aug 2020 08:36 AM
உள்ளாட்சி அமைப்புகளிடம் நிறைவுச் சான்றிதழ் பெறும் நடைமுறையால், சிறிய வகை வணிகக் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
வீடு, வணிக வளாகம், தொழில் வளாகம் உள்ளிட்ட அனைத்து வகைக் கட்டிடங்களையும் கட்டுவதற்கு, அதன் சதுர அடி பரப்புக்கு ஏற்ப உள்ளாட்சி நிர்வாகத்திடமோ அல்லது உள்ளூர் திட்டக் குழுமத்திடமோ விண்ணப்பித்து, கட்டிட அனுமதி எண் பெற வேண்டும் என்பது நடைமுறை.
விதிப்படி அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின்படி தான் கட்டிடங்|களை கட்ட வேண்டும். ஆனால், விதிகளை மீறி கட்டிடங்களைக் கட்டுவதால், வாகன நிறுத்துமிட வசதி இல்லாதது, பாதுகாப்பு இல்லாதது, போக்குவரத்து நெருக்கடி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதைத் தவிர்க்கும் வகையில், கடந்த ஆண்டு தமிழக அரசின்நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் ‘தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்’உருவாக்கப்பட்டு, அதற்கானஅரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி, குடியிருப்பு, தொழிற்சாலை கட்டிடங்களை தவிர்த்து, மற்ற வகை கட்டிடங்களைக் கட்டியவர்கள், கட்டிட அனுமதி எண் பெற்ற அமைப்பிடமிருந்து `அனுமதிக்கப்பட்ட முறையில்தான் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது' என கட்டிட நிறைவுச் சான்றிதழ் (பில்டிங் கம்ப்ளீஷன் சர்ட்டிஃபிகேட்) பெற்று சமர்ப்பித்தால் மட்டுமே, அந்தக் கட்டிடத்துக்கு மின்சாரம், குடிநீர் மற்றும் சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த அறிவிக்கையின்படி, 12 மீட்டர் உயரத்துக்குள் கட்டப்பட்ட கட்டிடம், 3 வீடுகள் கொண்ட கட்டிடம், 8,072 சதுரஅடிக்கு உட்பட்ட குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்களுக்கு நிறைவுச்சான்றிதழ் பெறத் தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு செயலர் கதிர்மதியோன் கூறும்போது, "இப்புதிய அறிவிப்பு கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டாலும், பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்,மின் வாரியத்தினர் நடப்பு மாதம்தான் மின் இணைப்புக்கு நிறைவுச் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளனர். விதிமீறல் கட்டிடங்களுக்கு கடிவாளம்போட இம்முறை வரவேற்கத்தக்கது.
அதேசமயம், வீடுகளுடன் இணைத்தோ அல்லது குறிப்பிட்ட பரப்பில் தனியாகவோ கட்டப்படும் சிறிய வகை வணிகக் கட்டிடங்களைக் கட்டியவர்கள், இச்சான்றிதழ் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதனால், சிறிய வகை வணிகக் கட்டிடம் கட்டியவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கிடைப்பதில் சிக்கல் உண்டாகிறது.
இதனால் அந்தக் கட்டிடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு|வருவதில் தாமதம் ஏற்படுவதுடன், அதை நம்பியுள்ள சிறு தொழில் செய்வோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
கோவை சரகத்தில் மட்டும் இப்புதிய நடைமுறையால் 200-க்கும் மேற்பட்டோர் மின் இணைப்பு பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே, குறைந்தபட்சம் 1,000 சதுரடி வரையிலோ அல்லது அதற்குக் குறைவான சதுரடி வரையிலோ உள்ள, சிறிய வகை வணிகக் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற, கட்டிட நிறைவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து நகராட்சி நிர்வாகத் துறை விலக்கு அளிக்க வேண்டும். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT