Published : 01 Aug 2020 08:08 AM
Last Updated : 01 Aug 2020 08:08 AM

தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்குகிறது; திருமணத்தில் 50, இறுதிச்சடங்கில் 20 பேருக்கு அனுமதி: ஊரடங்கு நீட்டிப்புக்கான அரசாணை வெளியீடு

சென்னை

தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு காலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர், இறுதிச்சடங்கில் 20 பேர்மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று முதல்7-ம் கட்ட ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31 வரை சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள், வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு பகுதிகள், மாநிலத்தில் உள்ள அனைத்து பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை தொடர்கிறது. சுற்றுலாத் தலங்கள், ஷாப்பிங் மால்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத விளையாட்டு அரங்கங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் (2, 9, 16, 23, 30 தேதிகள்) தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்று, பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவமனை வாகனங்கள், அவசர ஊர்திகள் அனுமதிக்கப்படும். மருத்துவ அவசரங்களுக்காக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

அரசு பேருந்துகள் ரத்து

திருமணம், திருமணம் தொடர்பான நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம். இறுதிச்சடங்கு, இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி உண்டு. மாநிலம் முழுவதும் தனியார், அரசுப் பேருந்துகள் இயக்கம் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கெனவே இணை நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டுக்குள் இருக்க வேண்டும். மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் வெளியில் வர அனுமதியுண்டு. ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

அனைவரும் பொது இடத்துக்கு வரும்போதும், பணிபுரியும் இடத்திலும், பயணத்தின்போதும் முகக் கவசம் அணிய வேண்டும். 6 அடி இடைவெளியை பொது இடத்தில் பின்பற்ற வேண்டும். பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும். குறிப் பாக, பொது இடத்தில் மது அருந்துதல், பான், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துதல் தடை செய்யப்படுகிறது.

முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக அமல்படுத்தப்படும். தொடர்ந்து கை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறது. யாராவது இவற்றை மீறி நடந்தால், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்தமுறை, ஊடரங்கு நீட்டிப்பின்போது திருமணம், இறுதிச்சடங்குகளில் 50 பேர் பங்கேற்கலாம் என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திருமணத்துக்கு 50 பேர், இறுதிச்சடங்கில் 20 பேர் பங்கேற்கலாம் என அரசாணையில் கூறப்பட்டி ருந்தது.

இந்த முறை முதல்வரின் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் திருமணம், இறுதிச்சடங்கு அனுமதி குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. அதேநேரம், திருமணத்துக்கு 50 பேர் வரை, இறுதிச்சடங்கில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம் என்பது விளக்கமாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

தலைவர்களின் விழாக்கள்

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணை: தமிழக அரசால் தலைவர்கள், அறிஞர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கரோனா தொற்று உள்ள நிலையில், தலைவர்களின் சிலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் மட்டும் மாலை அணிவிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் உடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் 5 பேருக்கு மிகாமல், அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த பதிவுபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் 5 பேருக்கு மிகாமல் சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி மற்றும் வாகனத்துக்கான அனுமதியைப் பெற்று அரசு அறிவித்த வழிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி மாலை அணிவித்து மரியாதை செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x