Published : 01 Aug 2020 07:44 AM
Last Updated : 01 Aug 2020 07:44 AM

கரோனா சிகிச்சைக்கு கோவையில் கூடுதலாக 1,000 படுக்கைகள்: உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவையில் கூடுதலாக 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தலைமை வகித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

கோவையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, சர்வதேச அளவிலான தொழில் போட்டியை சமாளிப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 20-ம் தேதி முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், கோவையில் ரூ.490 கோடி மதிப்பில் 3 நிறுவனங்கள் தொழில்களைத் தொடங்க உள்ளன. வரும் 5-ம் தேதி ரேஷன்கார்டுதாரர்களுக்கு முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

கோவையில் தினமும் 3,500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 1.24 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 4,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3,201 பேர் குணமடைந்துள்ளனர். 1,396 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று உறுதியானவர்களுக்கு, அந்தந்தப் பகுதியிலேயே சிகிச்சை அளிக்க வசதியாக, பெரியநாயக்கன்பாளையம் கே.டி.வி.ஆர். பொறியியல் கல்லூரியில் 400, பொள்ளாச்சி பி.ஏ. கல்லூரியில் 200, மேட்டுப்பாளையம் நஞ்சை லிங்கம்மாள் திருமண மண்டபத்தில் 100, இந்துஸ்தான் மருத்துவமனையில் 100, கொடிசியா மையத்தில் கூடுதலாக 200 என மொத்தம் 1,000 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் 5,580 சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான கடனுதவி வழங்கப்பட்டது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. கே.பெரியய்யா, டிஐஜி நரேந்திரன் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

ரூ.1.20 கோடியில் அதிநவீன பாலகம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் 3,306 சதுர அடி பரப்பில் அதிநவீன பாலகம் கட்டும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார்.

இங்கு 24 மணி நேரமும் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் கிடைக்கும். மேலும், வாகன நிறுத்துமிடம், குழந்தைகள் விளையாட்டு மைதானம், சிறிய நீர்வீழ்ச்சி ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன.

செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, ‘‘கோவையில் 346 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து 1.90 லட்சம் லிட்டர், திருப்பூரில் 240 சங்கங்களிடமிருந்து 1.13 லட்சம் லிட்டர் என சுமார் 3 லட்சம் லிட்டர் பால் தினமும் கொள்முதல் செய்யப்படுகிறது. கோவையில் தினமும் சுமார் 1.60 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் தினமும் 1.24 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி, அரசு எடுத்த நடவடிக்கையால் 1.90 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.

அதேபோல, பால் விற்பனையும் தினமும் 1.42 லட்சம் லிட்டரிலிருந்து 1.60 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. கோவையில் ஆவின் பால் உபபொருட்களின் விற்பனை மாதம் ரூ.1 கோடியிலிருந்து ரூ.1.60 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு 200 சில்லறை பால் விற்பனை முகவர்கள் மற்றும் 20 மொத்த விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன், ஆவின் தலைவர் கே.பி.ராஜு,பொது மேலாளர் ரவிக்குமார், விற்பனைப் பிரிவு பொது மேலாளர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x