Published : 01 Aug 2020 07:44 AM
Last Updated : 01 Aug 2020 07:44 AM
காஞ்சிபுரம் அருகே உள்ளாவூரில் ரூ.42.26 கோடியில் இம்மாவட்டத்தின் முதல் புதிய தடுப்பணை அமைக்க முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார்.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் புதிய தடுப்பணை கட்டுவதற்காக ரூ.42.26 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பழையசீவரம் அருகே உள்ள உள்ளாவூரில் இந்த தடுப்பணை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சுமார் 1000 மீட்டர் நீளத்துக்கு அமைய உள்ள இந்த புதிய தடுப்பணைக்கு முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். அவர்சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தால் பழையசீவரம், உள்ளாவூர், பாலூர், மேலச்சேரி, பழவேலி, பினாயூர், திருமுக்கூடல் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறும்.
நீண்ட கால கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாயாலூர் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டாலும் மாவட்ட பிரிப்பின்போது அந்த அணைகள் செங்கல்பட்டு மாவட்டத்துக்குச் சென்றுவிட்டன.
இந்த சூழ்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
முதல்வர் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியையொட்டி அணை அமைய உள்ள இடத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுக மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளப் பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT