Published : 01 Aug 2020 07:24 AM
Last Updated : 01 Aug 2020 07:24 AM
ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், ஆட்டோக்களுக்கு போதிய சவாரி கிடைக்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் ஆட்டோக்களில் காய்கறிகள், பழங்களை கொண்டு சென்று குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளன. மற்றொருபுறம் கரோனாஅச்சத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
வெளியூர் பயணம், பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வது என மக்களின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்கியுள்ளது. ஆட்டோக்களுக்கு போதிய சவாரி கிடைக்காததால், ஆட்டோ தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர்.
இதற்கிடையே, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்காலிகமாக வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். சிலர், ஆட்டோக்களில் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை எடுத்துக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆட்டோ தொழிலாளிகள் கருணாகரன், மனோஜ்குமார் ஆகியோர் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்குஉத்தரவால் ஆட்டோ தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.
சில விதிமுறைகளோடு ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவு மற்றும் கரோனா அச்சத்தால் மக்கள் வெளியே செல்வது குறைந்துள்ளது.
இதனால், வேறுவழியில்லாமல், ஆட்டோக்களில் காய்கறிகள், பழங்கள், கீரை, பருப்பு, பூண்டு, இஞ்சி உள்ளிட்டவற்றைக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம். இதில், கிடைக்கும் வருமானம் அன்றாட செலவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT