Published : 31 Jul 2020 09:23 PM
Last Updated : 31 Jul 2020 09:23 PM
அம்பேத்கர், வாஜ்பாய் ஆகியோரின் பெயர்களை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சூட்டக்கோரி பாஜக தலைவர் முருகன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பாஜக தலைவர் எல்.முருகன் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:
“முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.
இந்திய அரசியலைமைப்பு சட்டத்தை வகுத்து தந்தது அம்பேத்கர். அதேபோன்று இந்தியாவின் போக்குவரத்து, நவீன தொழில் நுட்பம், கல்வித்துறை, பாதுகாப்புத்துறை, விவசாயத்துறை என பல்வேறு துறைகளில் வியக்கத்தகு முன்னேற்றங்களைக் கொண்டு வந்தவர் முன்னாள் பாரதப் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய்.
அவருடை ஆட்சி காலத்தில் தான், அவருடைய முழு முயற்சியால் இந்தியாவில் முதன் முதலாக “மெட்ரோ ரயில் சேவை” தொடங்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. சென்னையில் முக்கிய பகுதிகள் அனைத்தும் இன்று மெட்ரோ ரயில் சேவையில் இணைக்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகிறார்கள்.
சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்கள் சூட்ட இருப்பதாக தாங்கள் இன்று அறிவித்துள்ளதை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது.
அதே போன்று சென்னை பாரிமுனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அம்பேத்கரின் பெயரையும், சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முன்னாள் பாரதப் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் பெயரையும் மற்றுமுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு, தியாகங்கள் புரிந்த தமிழக தலைவர்களின் பெயர்களையும் சூட்ட வேண்டுமென்றும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு எல்.முருகன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT