Published : 31 Jul 2020 04:22 PM
Last Updated : 31 Jul 2020 04:22 PM
கரோனா பொது முடக்கத்தால் கோயில் விழாக்கள், அரசியல் கூட்டங்களுக்குத் தடை இருப்பதால் அதைச் சார்ந்து இயங்கி வந்த கலைஞர்களின் வாழ்வு கஷ்ட ஜீவனத்தில் நகர்கிறது. அந்த வகையில் நாகர்கோவிலைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர் தங்கமணி சாலையோரம் மரவள்ளிக்கிழங்கு விற்று பிழைத்து வருகிறார்.
இது குறித்து நம்மிடம் பேசிய தங்கமணி, “நான் வில்லிசைக்குழு வச்சு நடத்துறேன். என்கூட எங்க குழுவுல மொத்தம் 7 பேர் இருக்காங்க. வில்லிசை தென் மாவட்டங்களில் ரொம்பப் பிரபலம். அதிலும் ஆடி மாசம் எங்களுக்குத் தொழில் ரொம்பவே நல்லா இருக்கும். ஆடி செவ்வாய், வெள்ளியைக் கணக்கு வைச்சு அம்மன் கோயில்களில் கொடைவிழா நடத்துவாங்க. அதனால ஆடி மாசத்துல புதன், ஞாயிற்றுக் கிழமைகள் போக மீதி எல்லா நாளுமே எங்களுக்கு நிகழ்ச்சி இருக்கும். அதிகபட்சமா ஆடி மாசத்துல 20 நாட்களுக்கு மேல வில்லிசை நிகழ்ச்சிகள் இருக்கும்.
ஆனா, அப்படி அசராம வில்லுப்பாடுன வாயால இன்னிக்கு ‘கிழங்கு... கிழங்கு’ன்னு கத்த வைச்சுருச்சு கரோனா. வீட்ல அம்மா, அப்பா ரெண்டு பேருமே படுக்கையில் இருக்காங்க. நிகழ்ச்சிகளுக்கு போகாம எத்தனை நாள்தான் சமாளிக்க முடியும்? அதான் மரவள்ளிக் கிழங்கு வாங்கி ரோட்ல போட்டு விக்க ஆரம்பிச்சுட்டேன்.
கோட்டாறு சந்தையில் போய் மரவள்ளிக் கிழங்கு வாங்கிட்டு வருவேன். பட்டசாலியன்விளை பகுதியில் கடை விரிப்பேன். ஒரு நாளைக்கு 30 கிலோ கிழங்கு எடுப்பேன். எல்லாத்தையும் வித்துட்டா எனக்கு 450 ரூபாய் கிடைக்கும். செலவு போக 300 ரூபாய் கையில் நிக்கும். வில்லுப்பாட்டு பாடுறதோட ஒப்பிடும்போது இதுரொம்பக் குறைவான வருமானம் தான். இருந்தாலும் என்ன செய்ய... சும்மா உக்காந்திருந்தா இதுவும் கிடைக்காதே.
கரோனா வர்றதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 24 மணிநேரம் வில்லிசை பாடி சாதனை புரிஞ்சேன். அதுக்குக் கொடுத்த கலாமாமணி விருது வீட்டில் இருக்கு. அப்படியெல்லாம் சாதிச்சவனைக் காலமும், கரோனாவும் கிழங்கு வியாபாரத்துக்குத் தள்ளிடுச்சு பாருங்க” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT