Published : 31 Jul 2020 04:09 PM
Last Updated : 31 Jul 2020 04:09 PM
புதுச்சேரியில் திரையரங்க வளாகத்தில் முதல்முறையாக கரோனா தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது.
புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா தொற்று பரிசோனை செய்யப்படுகிறது. தற்போது நடமாடும் பரிசோதனை மையம் மூலம் தொகுதி வாரியாக பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. புதுச்சேரி நகரப்பகுதியில் முதல்முறையாக காமராஜ் சாலையிலுள்ள ஜீவா, ருக்மணி திரையரங்க வளாகத்தில் கரோனா தொற்று பரிசோனை முகாம் இன்று (ஜூலை 31) நடைபெற்றது. முகாமை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து, அத்தொகுதி எம்எல்ஏ சிவா, கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
பரிசோதனை நடப்பதை பார்வையிட்ட பின்பு முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
"புதுச்சேரியில் மக்கள் வசதிக்காக நடமாடும் கரோனா மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகிறோம். அகில இந்திய அளவில் பத்து லட்சம் பேரில் 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை என்பது சராசரியாக உள்ளது. புதுச்சேரியில் 14 லட்சம் மக்கள் உள்ளனர். இதுவரை 40 ஆயிரம் பேருக்கு மேல் பரிசோதனை செய்துள்ளோம். பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவே இம்முயற்சியை எடுத்துள்ளோம்.
பரிசோதனை முடிவுகளை நான்கு விதமாகப் பிரித்து சிகிச்சையை புதுச்சேரியில் தருகிறோம். முதல் நிலையில் இருப்போரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை தருகிறோம். சிறிது அறிகுறி இருப்போரை தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கிறோம். மூன்று மற்றும் நான்காவது நிலைகளான நுரையீரல் பாதிப்பு, நீரிழிவு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் அதிக மூச்சு விட முடியாதோரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் அனுமதித்து சிகிச்சை தருகிறோம்.
புதுச்சேரியில் இதுவரை 3,467 பேர் வரை பாதிக்கப்பட்டு, அதில் 2,095 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,323 பேர் சிகிச்சையில் உள்ளனர். 63 சதவீதத்தினர் குணம் அடைந்துள்ளனர். 49 பேர் இறந்துள்ளனர். அதன் சதவீதம் 1.4. அகில இந்திய அளவை விட குறைவாக இருந்தாலும் மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கிறோம்.
கரோனா தொற்று பரிசோதனை செய்தால் முடிவு வர 12 மணி நேரத்துக்கு மேலாகிறது. இதன் கால அளவை குறைக்கத் தேவையான சாதனங்கள் வாங்க ரூ.1.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். அதேபோல், காரைக்கால், மாஹே, ஏனாமில் இன்னும் தாமதமாகிறது. மாஹே, ஏனாமில் அருகாமை மாநிலத்துக்கு அனுப்பிப் பரிசோதனை முடிவுகள் வாங்கும் சூழல் உள்ளது. அதையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நான் ஐந்து முறை உமிழ்நீர் பரிசோதனை செய்துள்ளேன். பரிசோதனையால் தொடக்கத்திலேயே குணப்படுத்திவிடலாம்.புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரையரை இன்னும் வரவில்லை. வந்தவுடன் அமைச்சரவை, எம்எல்ஏக்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT