Published : 31 Jul 2020 04:02 PM
Last Updated : 31 Jul 2020 04:02 PM
ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது, அதை தடை செய்வதோடு அத்தகைய விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தமன்னா உள்ளிட்ட பிரபலங்களையும் கைது செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் எளிதில் பணம் சம்பாதிக்கலாம், வாகனங்கள் வாங்கலாம் என ஆசைக்காட்டி இளைஞர்களை ஈர்க்கும் விளம்பரம் அதிக அளவில் சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் வருகிறது.
பிரபல நடிகை, கிரிக்கெட் வீரர் என விளம்பரப்படத்தில் நடிக்கின்றனர். இதை நம்பி இளைஞர்கள் பணத்தை இழக்கின்றனர். சமீபத்தில் டிபி.சத்திரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தனது சேமிப்பை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து, பின்னர் கடை முதலாளியின் பணத்தை சூதாடி அதையும் இழந்ததால் மனம் உடைந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டும் என கோரிக்கை வலுத்தது, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,
“ ஆன்லைன் சூதாட்டங்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக அதற்குள் செல்லும் இளைஞர்கள், அதற்கு அடிமையாகி விடும் சூழல் ஏற்படுகிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்டமுடியாத சூழல் ஏற்படும்போது, இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டபட்டதையடுத்து, உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் அதை விட வீரியமானது என்பதால் இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு அதற்கு தடை விதிக்க வேண்டும்.
ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க வேண்டும். கடந்த வாரம் ஆன்லைன் விளையாட்டில் தோற்றதால் டி.பி.சத்திரத்தில் பொறியியல் மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட செய்தியும் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும்”. எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் முறையிட்ட நிலையில், மனுவை ஆகஸ்ட் 4-ல் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT