Last Updated : 31 Jul, 2020 02:00 PM

 

Published : 31 Jul 2020 02:00 PM
Last Updated : 31 Jul 2020 02:00 PM

ஆதரவற்ற முதியோர்களைப் பாதுகாப்பதில் அரசின் நிலைப்பாடு என்ன?- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தமிழகத்தில் ஆதரவற்ற முதியோர்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அதிசயகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்செந்தூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேளான்கண்ணி, நாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர், முதியோர், ஆதரவற்றோர் பிச்சை எடுத்து காலத்தை ஓட்டுகின்றனர்.

இவர்களில் பலர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல சட்டத்தை 2007ல் கொண்டு வந்தது. இதை பின்பற்றி தமிழக அரசு கடந்த 2009-ல் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்தியது.

இந்த சட்டத்தில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்தச் சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் காப்பகங்கள் அமைக்க வேண்டும். ஆனால் பல மாவட்டங்களில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கான காப்பகங்கள் இல்லை. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர்களை பாதுகாக்க காப்பகங்கள் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் தமிழகம் முழுவதும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டத்தை முறையாகவும், முழுமையாகவும் அமல்படுத்தக்கோரி திருச்சி கல்லுக்குழியைச் சேர்ந்த பொன்.தம்மபாலா மற்றும் ராம்பிரபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் மாநில அரசின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 20-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x