Published : 30 Jul 2020 06:35 PM
Last Updated : 30 Jul 2020 06:35 PM
திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணியுடன் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளையும் மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தது. அதைத் தொடர்ந்து, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, கடந்த 5 மாதங்களாக கரோனா பரவல் தடுப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளில் லேசான தொய்வு காணப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன்படி, மாவட்டம் முழுவதும் 1,060 தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, சுகாதாரத் துறை மற்றும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு கொசுப் புழு உற்பத்தி ஆதாரங்கள் அழிப்பு, புகை மருந்து அடித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பு முறைகள் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 30) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
''ஏடிஸ் எஜிப்டி (Aedes Aegypti) என்ற வகை கொசுவின் மூலமே டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்தக் கொசு வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயும் உள்ள டயர், தேங்காய் சிரட்டைகள், ஆட்டு உரல், பிளாஸ்டிக் கப்புகள், பூந்தொட்டிகள், நிலத்தடி நீர்த்தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு செயற்கையான நீர்ப்பிடிப்புக் கலன்களில் முட்டையிட்டு இனவிருத்தி செய்யும்.
எனவே, இந்தக் கொசு உருவாகாமல் தடுக்க தண்ணீரைத் திறந்த நிலையில் சேமித்து வைக்காமல், கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். நீர் சேமிப்புத் தொட்டிகளை வாரத்துக்கு ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
டெங்கு வைரஸ் ரத்தத் தட்டணுக்களை அழித்துவிடும் தன்மை உடையது. ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர்ப் பாதை ஆகியவற்றில் ரத்தக் கசிவு ஏற்படும். எனவே, காய்ச்சலுக்கான அறிகுறி தெரிந்தவுடனேயே அரசு மருத்துவமனைகளுக்கு விரைவாக சென்று ரத்தப் பரிசோதனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனை பெறாமல் மருந்துக் கடைகளிலோ, போலி மருந்துவர்களிடமோ சிகிச்சை பெறுவதைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர், உயிர் காக்கும் மருந்தான ஓ.ஆர்.எஸ். போன்ற திரவங்களை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றைப் பொதுமக்கள் அருந்தலாம்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT