Published : 08 May 2014 03:11 PM
Last Updated : 08 May 2014 03:11 PM
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பது, தமிழரின் பண்பாட்டின் மீதான அத்துமீறலாகும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் களமிறக்கப்படும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல வாரியம் கூறியதை ஏற்று, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு எதிராக நிரந்தர தடை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு உரிமை மீதான அப்பட்டமான அத்துமீறலாகும். இத்தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது.
இன்று, நேற்றல்ல... சிந்து சமவெளி நாகரீகம் செழித்து வளர்ந்திளர்ந்த காலத்தில் இருந்து தமிழர் வரலாற்றில் என்றென்றும் இடம்பிடித்து, தமிழினத்தின் வீர அடையாளமாக இருந்த ஜல்லிக்கட்டு எனும் பண்பாடு தொடர்பான விளையாட்டை, அதன் அடிப்படைகளில் இருந்து விளங்கிக்கொள்ள மறுக்கும் ஒரு மனப்பான்மையையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.
இதில் ஈடுபடுத்தப்படும் காளைகள், அதற்கென்றே கன்றிலிருந்து வளர்க்கப்பட்டவை என்கிற விவரங்களையெல்லாம் கொடுத்த பின்பும், இப்படியொரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பது தமிழினத்தை அவமதிக்கும் செயலாகும்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் இன்று வரை ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்பட்ட காளை ஒன்றாவது இறந்துள்ளது என்ற செய்தி இருக்கிறதா? துன்புறுத்தல் என்ற சொல்லை ஜல்லிக்கட்டு காளைகள் மீது மட்டும் விலங்கின நல வாரியம் பயன்படுத்துவது ஏன்?
கேரளத்தில் உணவிற்காக ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான மாடுகள் அடித்துக்கொல்லப்படுகிறதே? அது சரியா? கோயில் விழா என்ற பெயரில் பல யானைகள் கேரளத்தின் கோயில்களில் நிறுத்தப்படுவதும், அவைகள் மதம் பிடித்து மக்களை துரத்துவதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறதே? இதனை ஏன் விலங்கின நல வாரியமும், உச்ச நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை?
இந்திய ராணுவத்தில் குதிரை படையும், ஒட்டகப் படையும் இருக்கின்றனவே, இப்படி போர்க் களத்தில் ஈடுபடுத்தப்படும் குதிரைகளும், ஒட்டகங்களும் அந்த விலங்குகள் பழக்குவது என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதில்லையா? இதெல்லாம் விலங்கின நல வாரியத்திற்குத் தெரியாதா?
தமிழ்நாட்டிற்கு வெளியே எது நடந்தாலும் அது சட்டப் பிரச்சனையாவதில்லை... ஆனால் தமிழனின் மொழி, பண்பாடு ஆகியன மட்டுமே இவர்களின் பார்வை உறுத்துகிறதே, அது ஏன்? இப்படிப்பட்ட நடவடிக்கைகள் யாவும் தமிழினத்தின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியாக நாம் தமிழர் கட்சி பார்க்கிறது.
இந்திய நாட்டில் இந்தி பேசும் மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழ் மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க முடியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தொன்றுதொட்டு வணங்கிவரும் கோயிலில் தமிழில் இறைவனை வழிபட எதிர்க்கும் தீட்சிதர்களுக்கு சாதகமான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கிறது.
இப்போது தமிழரின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கிறது. இந்திய அரசும், அதன் அதிகார மையங்களும் இப்படி தமிழ் தேசிய இனத்தின் மீது நடத்தும் இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தமிழர்களை தனிமைப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியன் என்கிற உணர்வில் இருந்து அந்நியப்படுத்தியும் வருகிறது என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்கிறோம்" என்று சீமான் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT