Published : 30 Jul 2020 03:12 PM
Last Updated : 30 Jul 2020 03:12 PM
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பான சுற்றுச்சூழல் துறையின் புதிய நிலைப்பாடு மக்கள் விரோதமானது என, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கை:
"சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக, அந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெற வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்தப் புதிய நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெறாமல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தாமல் நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதுமட்டுமின்றி, 8 வழிச்சாலை திட்டத்திற்கான திட்ட அறிக்கையையும் ரத்து செய்து உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
அந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், '2006-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் ஒப்புதல் வழங்க வேண்டும். அதேநேரத்தில் எந்த ஒரு திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அனுமதி பெற்ற பிறகு தான் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை' என்று கூறப்பட்டிருக்கிறது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த அப்பட்டமாக ஆதரவு அளிக்கும் நிலைப்பாடு இதுவாகும். இது சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்திற்கே எதிரானது.
உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று முன்நாள் விசாரணைக்கு வந்தபோது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் வாதிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதற்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு தனி நடைமுறை இருப்பதாகவும், அதனால் நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி தேவையில்லை என்றும் வாதிட்டார்.
ஆனால், மத்திய சுற்றுச்சூழல் துறையோ அதையும் தாண்டி, 8 வழிச்சாலைக்கு மட்டுமல்ல... மற்ற திட்டங்களுக்கும் கூட நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறியிருக்கிறது.
இந்தியாவின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பணி ஆகும். ஆனால், சுற்றுச்சூழல் அமைச்சகமோ அதற்கு மாறாக, சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவதில் நெடுஞ்சாலைத்துறையை விட அதிக ஆர்வம் காட்டுகிறது. இது வேலியே பயிரை மேயும் செயலாகும்.
இதே வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போதும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது இது தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காத மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், இப்போது முற்றிலும் புதிய நிலைப்பாட்டை எடுத்திருப்பது இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இழைக்கும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும்.
8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு எல்லையில்லாத பாதிப்பு ஏற்படும். அதனால் தான் இந்த திட்டத்தை பாமக கடுமையாக எதிர்த்து வருகிறது.
இதை உணர்ந்து 8 வழிச்சாலை தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய பதில் மனுவை சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
சென்னையிலிருந்து சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும். அதனால் இந்தத் திட்டத்தை பாமக தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும். விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT