Published : 30 Jul 2020 03:01 PM
Last Updated : 30 Jul 2020 03:01 PM
ஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் சென்னை மாவட்டத்துக்கென்று தனி அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
சென்னைக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் அம்சங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“ * பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:
1) தற்போது 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
2) உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.
எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்பு இருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
3) ஏற்கெனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.
பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
4) காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
5) ஏற்கெனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
6) அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் (இ.காமர்ஸ்) மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT