Published : 29 Jul 2020 10:23 PM
Last Updated : 29 Jul 2020 10:23 PM
ஜாதிச்சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பட்டியல் இன மாணவி மீது நான்கு பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம், நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பரங்கினி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பிளஸ் 2-வில் 600க்கு 354 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இருளர் இனத்தைச் சார்ந்த அவர், மருத்துவ படிப்பு படிக்க விரும்பிய அவர் தனக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார்.
ஜாதி சான்றிதழ் வழங்குவது குறித்து மாணவியின் கிராமத்துக்கு விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் விசாரணைக்கு சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினர், மாணவிக்கு இருளர் இன சான்றிதழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் நான்குபேர் மாணவியை தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT