Published : 29 Jul 2020 07:37 PM
Last Updated : 29 Jul 2020 07:37 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.நாகராஜன் பிரசவத்திற்காக தனது மனைவியை அரசு மருத்துவமனையில் சேர்த்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். அவருக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சி அடைந்தார்.
இளையான்குடி அருகே கீழநெட்டூரைச் சேர்ந்தவர் எஸ்.நாகராஜன் (49). இவர் கடந்த ஆண்டு மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு 2003-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்நிலையில் இவரது மனைவி சிவசங்கரி 16 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமானார்.
அவர் கர்ப்பக் காலத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பரிசோதித்து வந்தார். இந்நிலையில் அவர் பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 9-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இதனால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரி நேற்று வீடு திரும்பினார். சாதாரண சளி, காய்ச்சலுக்கே தனியார் மருத்துவமனைக்கு செல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், தனது மனைவியை அரசு மருத்துவமனையில் சேர்த்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மானாமதுரை எம்எல்ஏ திகழ்கிறார். மேலும் இந்நிகழ்வு அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கையை மக்களிடையே அதிகரிக்கும்.
இதுகுறித்து எம்எல்ஏ எஸ்.நாகராஜன் கூறியதாவது: எனது மனைவி எப்போதும் எளிமையை விரும்பக் கூடியவர். அவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதையே விரும்பினார். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவரது குடும்பத்தாரே அரசு மருத்துவமனைக்கு செல்லாவிட்டால், பொதுமக்களுக்கு எப்படி நம்பிகை ஏற்படும்.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவே அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். மேலும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அதிக கவனம் செலுத்துகின்றனர்.
டீன் ரத்தினவேல் தினமும் 2 முறை பிரசவ வார்டை பார்வையிடுகிறார். தனியார் மருத்துவமனை போல் சீமாங்க் திட்டத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன, என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT