Published : 29 Jul 2020 05:39 PM
Last Updated : 29 Jul 2020 05:39 PM

35 ஆண்டு காலக் காத்திருப்புக்கு முடிவு; சாதிச் சான்றிதழ் வழங்க அரசு உத்தரவு: உற்சாகத்தில் ஈழுவா-தீயா மக்கள்

உதகையில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஏற்கெனவே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஈழுவா-தீயா மக்கள். | கோப்புப் படம்.

உதகை

35 ஆண்டு காலமாக சாதிச் சான்று கேட்டு போராடி வரும் ஈழுவா-தீயா மக்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் சாதிச் சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் படுகர்கள், தாயகம் திரும்பிய தமிழர்கள், மலையாளிகள் (ஈழுவா-தீயா) குறிப்பிட்ட அளவில் வசிக்கின்றனர். மொத்தமுள்ள 7.5 லட்சம் மக்கள்தொகையில் இவர்கள் சுமார் 50 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றனர்.

இதில், மலையாளிகள் (ஈழுவா-தீயா) சுமார் 1.5 லட்சம் பேர் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கின்றனர்.

கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஈழுவா-தீயா மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தங்களின் பிள்ளைகளின் கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அரசின் எவ்வித சலுகையும் கிடைப்பதில்லை எனவும் அம்மக்கள் குற்றம்சாட்டி தொடர்ந்து போராடி வந்தனர்.

இந்நிலையில், "தமிழகத்தில் வாழும் ஈழுவா மற்றும் தீயா மக்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் சாதிச் சான்றிதழ் வழங்கலாம்" என தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு இம்மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாதிச் சான்றிதழ் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய மக்கள் சட்ட மைய தமிழ் மாநில இயக்குநர் வழக்கறிஞர் விஜயன் கூறும்போது, "எங்களுக்கு வழங்கி வந்த சாதிச் சான்றிதழ் நிறுத்தப்பட்டு, கடந்த 35 ஆண்டுகளாக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது.

வழக்கறிஞர் விஜயன்

கோரிக்கையை பரிசீலிக்கத் தமிழக அரசால், ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ரா தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 60 நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு, அறிக்கையைத் தமிழக அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதன்படி, இக்குழு விசாரணை மேற்கொண்டு, 'ஈழுவா-தீயா மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கலாம்' எனப் பரிந்துரை செய்தது. இதற்கான உத்தரவை நேற்று தமிழக அரசு அறிவித்தது. கடந்த 35 ஆண்டுகளாக எங்களது குழந்தைகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பால், எங்களது குழந்தைகளின் வாழ்வாதாரம் மேம்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது 35 ஆண்டு காலப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x